Loading...
"பிள்ளைங்க என்ன பேசுறாங்கன்னு பெற்றோருக்குத் தெரிஞ்சிடும்..." இன்ஸ்டாகிராம் மெட்டா ஏஐயில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு அம்சம்
இன்ஸ்டாகிராம்

"பிள்ளைங்க என்ன பேசுறாங்கன்னு பெற்றோருக்குத் தெரிஞ்சிடும்..." இன்ஸ்டாகிராம் மெட்டா ஏஐயில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு அம்சம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 16, 2026
09:11 pm

செய்தி முன்னோட்டம்

மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராம் தளத்தில் மெட்டா ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் டீன் ஏஜ் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிவித்துள்ளது. கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின்படி, பெற்றோர் கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் ஒரு டீன் ஏஜ் பயனர், மெட்டா ஏஐ சாட்போட்டிடம் தற்கொலை அல்லது சுயபரிசோதனை/சுயபாதிப்பு குறித்து பேசினால், அது குறித்து பெற்றோருக்கு உடனடியாக எச்சரிக்கை அலர்ட் அனுப்பப்படும்.

வழிகாட்டுதல்

மனநல நிபுணர்களின் ஆலோசனையுடன் பெற்றோருக்கு வழிகாட்டுதல்

இந்த புதிய அம்சத்தின் மூலம் பெற்றோருக்கு அலர்ட் அனுப்பப்படுவதுடன், மனநல நிபுணர்களால் சான்றளிக்கப்பட்ட சில முக்கிய வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.

தங்களது பிள்ளைகளிடம் இந்த இக்கட்டான சூழலில் எவ்வாறு பேசுவது, அவர்களுக்கு எத்தகைய மனநல ஆதரவை வழங்குவது மற்றும் ஆஃப்லைனில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை எப்படிப் பெற்றுத் தருவது போன்ற ஆலோசனைகள் இதில் அடங்கும்.

தற்போதைய நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இது உலகளவில் விரிவுபடுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

மனித பரிசோதனைக்கு பிறகே பெற்றோருக்கு எச்சரிக்கை

மெட்டா ஏஐ அமைப்பானது, ஒரு பயனர் தற்கொலை சார்ந்த மறைமுகக் குறிப்புகளைப் பயன்படுத்தினாலும் அதைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில் மனநல நிபுணர்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் அத்தகைய ஆபத்தான உரையாடல்களைக் கண்டறிந்தவுடன், மெட்டா நிறுவனத்தின் மனித மறுஆய்வுக் குழு அந்த உரையாடலை முழுமையாகப் பரிசீலிக்கும்.

அதில் ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே பெற்றோருக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.

ஒருவேளை பிள்ளைகளின் நோக்கம் குறித்து சிறிய சந்தேகம் இருந்தால் கூட, ஆபத்தைத் தவிர்க்கும் பொருட்டு பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கவே மெட்டா முன்னுரிமை அளிக்கும்.

ADVERTISEMENT

உதவி

அவசர கால உதவி மற்றும் எம்பதி சாட்

அபாயகரமான கட்டத்தில் இருக்கும் பயனர்களைக் காப்பாற்ற அவசரக் கால மீட்புப் படையினரைத் தொடர்பு கொள்ளும் மற்றொரு புதிய அம்சத்தையும் மெட்டா உருவாக்கி வருகிறது.

இது டீன் ஏஜினர் மற்றும் பெரியவர்கள் ஆகிய இருவருக்குமே பொருந்தும்.

மேலும், மெட்டா ஏஐ தற்பொழுது அதிக எம்பதியுடன் பேசும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆபத்தான எண்ணங்களுடன் பேசும் பிள்ளைகளின் உரையாடலை சட்டென்று துண்டிக்காமல், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்குத் தேவையான நம்பகமான ஆலோசனைகளையும், உதவி எண்களையும் இந்த ஏஐ சாட்பாட் வழங்கும்.

ADVERTISEMENT

கட்டுப்பாடு

கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் உள்ளடக்கக் கட்டுப்பாடு

இன்ஸ்டாகிராமில் உள்ள டீன் ஏஜ் கணக்குகள் அனைத்தும் தானாகவே 13+ உள்ளடக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதால், மெட்டா ஏஐ ஏற்கனவே பாலியல் அல்லது ஆல்கஹால் போன்ற உணர்திறன் மிக்க தலைப்புகளில் பேசுவது தடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இதனுடன் லிமிடெட் கன்டென்ட் என்ற கூடுதல் கட்டுப்பாட்டு அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் இந்த அமைப்பைத் தேர்வு செய்யும்போது, மெட்டா ஏஐ தேவையற்ற அல்லது உணர்திறன் மிக்க எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிடும்.

சமூக ஊடகங்கள் வழியாகப் பிள்ளைகளுக்கு ஏற்படும் மனநலப் பாதிப்புகளைத் தடுத்து, ஏஐ பயன்பாட்டைப் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT