பூமியை விட 23 மடங்கு பெரிய பாறை கோள்! அறிவியலாளர்களை குழப்பும் புதிய மெகா எர்த் கண்டுபிடிப்பு
செய்தி முன்னோட்டம்
வானியலாளர்கள் நாசாவின் டெஸ் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி, ஜிஜே 523பி என்று பெயரிடப்பட்டுள்ள புதிய பிரம்மாண்டமான புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கோள் நமது பூமியை விட 2.55 மடங்கு அகலமானது மற்றும் சுமார் 23.5 மடங்கு அதிக நிறை கொண்டது. வழக்கமாக இவ்வளவு பெரிய கோள்கள் அதிகளவில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் சூழப்பட்டிருக்கும். ஆனால், இந்த புதிய கோள் வாயுக்கள் இன்றி முழுக்க முழுக்க அடர்ந்த பாறைகளால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குழப்பம்
வானியலாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய கோளின் அடர்த்தி
அறிவியல் கோட்பாடுகளின்படி, ஒரு கோள் பூமியை விட 20 மடங்கு அதிக நிறையை அடையும் போது, அது தன்னை சுற்றியுள்ள வாயுக்களை ஈர்த்து பிரம்மாண்ட வாயுக்கோளாக மாறத் தொடங்கும்.
ஆனால், ஜிஜே 523பி கோள் தனது தாய் நட்சத்திரத்தை 17.75 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வரும் வேளையிலும், வாயுக்களைக் கொள்ளாமல் மிகவும் அடர்ந்த பாறை அமைப்பைக் கொண்டுள்ளது.
வெறும் 170 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே பழமையான இந்த இளம் கோளின் உருவாக்கம், தற்போதைய கோள்கள் உருவாக்கக் கோட்பாடுகளைப் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ஆராய்ச்சி
டெஸ் செயற்கைக்கோள் மற்றும் விஎஸ்என் தொலைநோக்கி மூலம் ஆய்வு
இந்த மெகா-எர்த் கோளானது முதன்முதலில் நாசாவின் டெஸ் விண்கலம் மூலம் விண்மீனின் வெளிச்சத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு அடையாளம் காணப்பட்டது.
தொடர்ந்து அரிசோனாவில் உள்ள கிட் பீக் தேசிய வான்நோக்ககத்தின் 3.5 மீட்டர் WIYN தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வாயிலாக இதன் நிறை மற்றும் அடர்த்தி துல்லியமாகக் கணக்கிடப்பட்டன.
இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் மேக்ஸ் க்ராஃப்ட் தெரிவிக்கையில், "நாங்கள் முற்றிலும் எதிர்பாராத ஒரு விண்வெளி அதிசயத்தை இந்தக் கோள் மூலம் கண்டுள்ளோம்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
காரணம்
வாயு மண்டலம் அழிந்ததா? அல்லது மாபெரும் மோதலா?
இந்த கோள் எப்படி உருவானது என்பது குறித்துப் பல்வேறு அறிவியல் அனுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன.
முதன்முதலில் உருவான போது இருந்த தடிமனான வாயு மண்டலத்தை, நட்சத்திரத்தின் கதிர்வீச்சுகள் காலப்போக்கில் அழித்திருக்கலாம் என்பது ஒரு கணிப்பாகும்.
மற்றொரு சாத்தியக்கூறாக, இரு பெரிய பாறை கோள்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதன் விளைவாக, அவற்றின் வாயுக்கள் விண்வெளியில் தூக்கி எறியப்பட்டு, எஞ்சிய அடர்ந்த பாறைப் பகுதிகள் ஒன்றாக இணைந்து இந்த ஒற்றைப் பிரம்மாண்ட மெகா-எர்த் கோளாக உருவெடுத்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
அறிவியல்
கோள்கள் உருவாக்கம் குறித்த புதிய அறிவியல் தேடல்
வானியலில் மெகா-எர்த் என்பது அதிகாரப்பூர்வ வகைப்பாடு இல்லை என்றாலும், பாறை கோள்களுக்கும் பிரம்மாண்ட வாயு கோள்களுக்கும் இடைப்பட்ட மிக அரிதான கோள்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஒரு கோளின் கண்டுபிடிப்பை மட்டும் வைத்து ஒட்டுமொத்தக் கோள்கள் உருவாக்கக் விதியை மாற்றியமைக்க முடியாது என்றாலும், இது போன்ற மேலும் பல அடர்ந்த பாறை கோள்களைக் கண்டுபிடிப்பது, பிரபஞ்சத்தில் கோள்கள் எவ்வாறு பிறக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.