ஆழ்கடல் சுற்றுச்சூழலை பாதிக்கும் கடல் வெப்ப அலைகள், புதிய ஆய்வு முடிவுகள்
நிலப்பரப்பில் ஏற்படும் வெப்ப அலைகளைப் போலவே, கடலில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்த புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளானது 'நேச்சர் கிளைமேட் சேஞ்சு' இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களின் படி, கடல் வெப்ப அலைகளானது கொஞ்சம் கொஞ்சமாக பொதுவாக நடைபெறும் நிகழ்வுகளாகி வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெப்ப அலைகளானது, கடல் சுற்றுச்சூழலில் பல்வேறு வகையில் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடகிழக்கு பசிபிக் பகுதியில், பெருந்தடுப்பு பவளத்திட்டுகளில் அமைந்திருக்கும் பவளப்பாறைகளையும், கெல்ப் காடுகள் போன்ற ஆழ்கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை கடல் வெப்ப அலைகள் அச்சுறுத்தி வருவதாகவும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆழ்கடலில் அதிகரிக்கும் வெப்பம்:
இந்த ஆய்வில் ஈடுபட்ட எலிஸா ஃப்ராக்கோபொலோ பேசும் போது, "கடலின் மேற்பரப்பிற்கு கீழே வெப்ப அலைகளின் தாக்கம் குறித்த ஆய்வு செய்யும் வகையில் இது முதல் முயற்சி" எனத் தெரிவித்திருக்கிறார். இந்த ஆய்வுக்காக கடலின் மேற்பரப்பிலிருந்து 2000 மீட்டர்கள் ஆழம் வரையிலான தகவல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், 1993ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஏற்பட்ட கடல் வெப்ப அலைகள் குறித்த தகவல்களையும் அந்த ஆய்வில் உட்படுத்தியிருக்கிறார். கடலின் மேற்பரப்பில் இருந்து 50 முதல் 200 மீட்டர்கள் ஆழத்திற்கிடையில் வெப்ப அலைகளின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. நிலப்பரப்பில் இருப்பதை விட 19% வெப்ப அலைகளின் தாக்கம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நிலைத்திருக்கும் வெப்ப அலைகளின் தாக்கம்:
ஒரு வெப்ப அலை நிகழ்வு ஏற்பட்டு, மேற்பரப்பு வெப்பம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகும், அதனால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக ஆழ்கடலானது இரண்டு ஆண்டுகள் வரை அந்த வெப்பத்தைத் தக்க வைத்திருப்பதாகவும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆழ்கடலில், புலம் பெயர முடியாத பவளப் பாறைகள் உள்ளிட்டவற்றையே கடல் வெப்ப அலைகள் அதிகம் பாதிப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர் ஆய்வாளர்கள். கடல் வெப்ப அலை நிகழ்வுகள் அதிகமாகி இருப்பதற்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என வாதாடுகின்றனர் அவர்கள். கடல் வெப்ப அலைகள், ஆழ்கடல் சுற்றுச்சூழலை அச்சுறுத்தி வரும் நிலையில், அவற்றைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்த ஆய்வு முடிவில் பேசப்பட்டிருக்கிறது.