AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு!
தொடர்ந்து அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளில் அவற்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. தற்போது மனநல மருத்துவத் துறையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ஆய்வு ஒன்று செய்யப்பட்டு அதன் முடிவுகள் 'ட்ரான்ஸ்லேஷனல் சைக்கார்டி' என்ற இதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் கொண்டவர்களை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை அளித்திருக்கின்றனர். ஆய்வில் முடிவில் மனநல பிரச்சினைகள் கொண்டவர்களிடம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண முடிந்திருக்கிறது. பாரம்பரிய மனநல சிகிச்சைக்கு மாற்றாக இந்த சிகிச்சைகளைப் பார்க்க முடியாது, எனினும் பாரம்பரிய சிகிச்சைக்கும் மனநல பிரச்சினை உள்ளவர்களையும் இணைக்கும் பாலமாக இந்த AI தொழில்நுட்பம் கண்டிப்பாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர் இந்த ஆய்வை நடத்தியவர்கள்.
மனநல சிகிச்சையிலும் AI:
லூமென் (Lumen) என்ற குரலை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியிருக்கின்றனர். இதில் மனச்சோர்வு, கவலை உள்ளிட்ட மனநல பிரச்சினைகளைக் கொண்ட 63 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் மூன்றில் இரண்டு பகுதி பேரிடம் லூமென் சேவையுடன் கூடிய டேப்லட் ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் குரல் வழியாக அவர்களுக்கு மனநல சிகிச்சை அளித்திருக்கிறது AI. மீதி பேர் எந்த தலையீடும் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டனர். இறுதியில் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் கவலை மற்றும் மனச்சோர்வு குறைந்து காணப்பட்டிருக்கின்றனர். சிகிச்சை எடுத்தக் கொள்ளாதவர்களிடம் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.