LinkedIn கணக்குகளில் புதிய மாற்றம்: போலி கணக்குகளை ஒழிக்க அறிமுகமான அதிரடி அம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான அடையாளங்களை உருவாக்கி, தொழில்முறை கணக்குகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், LinkedIn நிறுவனம் தனது தளத்தில் பல புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு, வணிக வாய்ப்புகள் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு நம்பகத்தன்மை மிக முக்கியமாகும். இதனை வலுப்படுத்த, ஏற்கனவே 115 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களும் 7 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களும் லிங்க்ட்இன்னின் சரிபார்ப்பு கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில் ட்ரூகாலர் போன்ற மூன்றாம் தரப்பு தளங்களுடன் லிங்க்ட்இன் தனது கூட்டாண்மையை விரிவுபடுத்தியுள்ளது.
சான்றளிக்கும் வசதி
சக பணியாளர்கள் சான்றளிக்கும் வசதி
புதிய அம்சத்தின் மூலம், சரிபார்க்கப்பட்ட லிங்க்ட்இன் பயனர்கள், தங்கள் சக பணியாளர்கள் அல்லது வகுப்புத் தோழர்களின் கல்வி மற்றும் பணி அனுபவத்தின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து சான்றளிக்க முடியும்.
இச்சேவையை பயன்படுத்த சான்றளிக்கும் பயனர் கணக்கு சரிபார்க்கப்பட்டதாகவும், குறைந்தது ஓராண்டு காலம் இணைப்பில் உள்ளவராகவும், இரு காரணி அங்கீகாரத்தை (2FA) பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும்.
கூடுதல் அதிகாரம்
நிறுவன பக்க நிர்வாகிகளுக்குக் கூடுதல் அதிகாரம்
நிறுவனங்களின் பக்கங்களை நிர்வகிப்பவர்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யாமல் பொய்யாக உரிமை கோரும் போலி கணக்குகளைத் தடுக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நிறுவனப் பக்கத்துடன் இணையும் முன், அப்பயனரின் பணி மின்னஞ்சல் மூலம் வேலை அனுபவத்தை உறுதிசெய்யும் புதிய அம்சமும் சோதிக்கப்பட்டு வருகிறது.
லிங்க்ட்இன் தனது 'Verified on LinkedIn' சேவையை மற்ற முன்னணி தளங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
அடோப் மற்றும் யூசர்டெஸ்டிங் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது ட்ரூகாலர் தளமும் இதில் இணைந்துள்ளது.
இதன்மூலம் ட்ரூகாலர் அழைப்புகளின் போது பயனர்களின் சரிபார்க்கப்பட்ட பணி விவரங்கள் மற்றும் வேலைத் தலைப்புகள் காட்சியளிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.