பதிவுகளை எழுத AI கருவி, புதிய வசதியை சோதனை செய்யும் LinkedIn
உலகின் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுடைய சேவையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. தொழில் சார்ந்த சமூக வலைத்தள நிறுவனமான லிங்க்டுஇன்-னும் தங்களுடைய தளத்தில் AI வசதியுடன் கூடிய புதிய கருவிகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது. லிங்க்டுஇன் தளத்தில் பல துறைகளைச் சேர்ந்தவர்களும், தங்களுடைய அனுபவங்களை, கருத்துக்களை நீண்ட பதிவுகளாக பகிர்ந்து கொள்வது வழக்கம். எனவே, நீண்ட நெடிய பதிவுகளை எழுதுவதற்கு உதவக்கூடிய வகையில் AI கருவிகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம். இது குறித்த பதிவொன்றை, அந்நிறுனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான கேரன் பாரூ, லிங்க்டுஇன் தளத்திலேயே பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், இந்த புதிய முயற்சி எத்தகையது, இது எப்படி லிங்க்டுஇன் பயனர்களுக்கு பயனளிக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார் அவர்.
லிங்க்டுன் தளத்தில் புதிய AI கருவி:
அலுலவகத்திலோ அல்லது நமது தொழில் சார்ந்தோ நீண்ட பதிவொன்றை எழுத நாம் விரும்புவோம். ஆனால், அனைவருக்கும் தொடக்கத்திலேயே நீண்ட பதிவுகளை எழுதுவது என்பது எளிதான செயல் கிடையாது. எனவே, நாம் சொல்ல விரும்பும் விஷயத்தை சுருக்கமாக 30 வார்த்தைகளுக்குள் லிங்க்டுஇன் வழங்கும் AI கருவியில் உள்ளீடு செய்தால், நமக்கான பதிவை அந்த AI கருவியே உருவாக்கித் தருமாம். இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவில் நாம் மேற்கொள்ள விரும்பு மாற்றங்களைச் செய்து லிங்க்டுஇன் தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும், எனத் தன்னுடைய லிங்க்டுஇன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கேரன் பாரூ. முதற்கட்டமாக இந்த வசதியானது சோதனை செய்த பிறகு, லிங்க்டுஇன் பயனர்களுக்கு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.