புகாட்டி சூப்பர் கார்களை BGMI ஸ்மார்ட்போன் கேமில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கிராஃப்டான்
கடந்த ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட பேட்டில் கிரௌண்டு மொபைல் இந்தியா (BGMI) ஸ்மார்ட்போன் விளையாட்டானது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. வெளியாகிய சில நாட்களிலேயே இந்தியாவில் விளையாடப்படும் டாப் ஸ்மார்ட்போன் கேம்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது BGMI. தற்போதைய அறிமுகத்திற்குப் பிறகு பல புதிய வசதிகளையும், கட்டுப்பாடுகளையும் BGMI செயலியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அதனை உருவாக்கி வெளியிட்டிருக்கும் கிராஃப்டான் நிறுவனம். உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பாளரான புகாட்டி நிறுவனத்துடன் கைகோர்த்து, அந்நிறுவனத்தின் விலையுயர்ந்த சூப்பர் கார் மாடல்களை விளையாட்டின் போது கேமர்கள் பயன்படுத்த புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த சூப்பர் கார்களானது ஆகஸ்ட் 6-ம் தேதி வரை BGMI விளையாட்டில் கேமர்களின் பயன்பாட்டிற்கு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது?
புகாட்டி நிறுவனத்தின் மிகவும் வேகமான மற்றும் பவர்ஃபுல்லான ரோட்ஸ்டரான 'புகாட்டி வெரன் 16.4 கிராண்டு ஸ்போர்ட் விட்டெஸ்' சூப்பர் கார் மற்றும் அந்நிறுவனத்தின் விலையுயர்ந்த சூப்பர் காரான 'புகாட்டி லா வாய்டூர் என்ஒயர்' ஆகிய இரண்டு சூப்பர் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. புகாட்டி வெரன் சூப்பர் காரானது இந்தியாவில் ரூ.11.39 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையிலும், லா வாய்டூர் என்ஒயர் சூப்பர் காரானது ரூ.133 கோடி விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கேமர்கள் BGMI விளையாட்டில் அதிக நேரம் கேம் விளையாடுவதைத் தடுக்க 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளில் 3 மணி நேரமும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மணி நேரம் மட்டுமே கேம் விளையாடும் வகையில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது கிராஃப்டான்.