தென்னிந்தியாவின் முதல் AI செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்த கன்னட செய்தி நிறுவனம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது, உலகளவில் செய்தித்துறையை அதிகளவில் ஆட்கொண்டு வரும் நிலையில், உலகளவில் பல செய்தி நிறுவனங்கள் AI செய்தித் தொகுப்பாளர்களை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். சாட்ஜிபிடி அறிமுகமான பிறகு, முதன் முதலில் ரென் ஷாவ்ராங் என்ற AI செய்தி தொகுப்பாளரை, கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது சீனாவைச் சேர்ந்த 'பீப்பிள்ஸ் டெய்லி' என்ற செய்தி நிறுவனம். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம், ஃபெதா என்ற தங்களது AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்தது குவைத் நாட்டைச் சேர்ந்த குவைத் டைம்ஸ் செய்தி நிறுவனம். உலக நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவிலும் 'இந்தியா டுடே' செய்தி நிறுவனம், தங்களது இந்தி மொழிச் சேனலான ஆஜ் தக்கில் 'சனா' என்ற AI செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்தது.
பிராந்திய மொழிகளிலும் AI செய்தித் தொகுப்பாளர்கள்:
இந்தியைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், OTV என்ற ஒடிசாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று 'லிசா' என்ற பெயர் கொண்ட AI செய்தித் தொகுப்பாளரைக் தங்கள் தொலைக்காட்சியில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது தென்னிந்தியாவின் முதல் AI செய்திக் தொகுப்பாளரை அறிமுகம் செய்திருக்கிறது கர்நாடகாவைச் சேர்ந்த 'பவர் டிவி' என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனம். 'சௌந்தர்யா' என்ற பெயர் கொண்ட இந்த AI செய்தி தொகுப்பாளரைக் கொண்ட தங்களது முதல் நிகழ்ச்சியை கடந்த செவ்வாயன்று ஒளிபரப்பியது பவர் டிவி. தென்னிந்தியாவின் முதல் AI செய்தித் தொகுப்பாளர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு நிகழ்ச்சிய வழங்கியிருக்கிறது சௌந்தர்யா.