லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார்
இன்று மின்னணு சாதனங்கள் முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தும் லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டிற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் குட்டெனௌ தன்னுடைய 100-வது வயதில் நேற்று முன் தினம் காலாமானார். 1922, ஜூலை 25-ல் பிறந்த அவருக்கு, அவருடைய 97 வயதில், கடந்த 2019-ல் லித்தியம் அயன் பேட்டரியை மேம்படுத்தலுக்கான ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசானது அப்போது பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டான்லி விட்டின்ஹம் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த அகிரா யோஷினோ ஆகியோருடன் பகிர்ந்தளிக்கப்பட்டது. 2019-ல் இந்த நோபல் பரிசை பெற்றதுடன், உலகில் மிக முதிய வயதில் நோபல் பரிசை வென்றவர் என்ற பெயரையும் தட்டிச் சென்றார் ஜான் குட்டெனௌ.
ஜான் குட்டெனொவின் பிற பங்களிப்புகள்:
லித்தியம்-அயன் பேட்டரி மேம்பாடு மட்டுமல்லாது, வேதியியலின் பிற ஆராய்ச்சிகளிலும் கண்டுபிடிப்புகளிலும் பங்கெடுத்திருக்கிறார் ஜான் குட்டெனௌ. நிக்கல் மற்றும் கோபால்ட்டை அடிப்படையாகக் கொண்ட கேத்தோடுகளுக்கு மாற்றாக, லித்தியம் அயன் பாஸ்பேட் கேத்தோடுகளின் ஆரம்பகட்ட உருவாக்கத்தில் பங்கெடுத்திருக்கிறார் ஜான் குட்டெனௌ. இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களில் முக்கிய செயல்பாட்டைக் கொண்டிருக்கும் RAM (Randon Access Memory)-யை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் இவர். இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்காவுக்காக வானிலை ஆய்வாளராகவும் போர்க்களத்தில் பணியாற்றியிருக்கிறார் குட்டெனௌ. 2008-ல், தன்னுடைய 'விட்னஸ் தி கிரேஸ்' என்ற தன்னுடைய சொந்த வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டிருக்கும் இவர், தன்னுடைய 100-வது வயதில் வயது மூப்பின் காரணமாகக் காலமடைந்தார்.