இந்தியாவில் புதிய ஏர் ஃபைபரை அறிமுகப்படுத்தியது ஜியோ
இந்தியாவில் 5G வசதியுடன் அதிவேக இணையதள வசதியை வழங்கக்கூடிய ஜியோ ஏர்ஃபைபர் சேவையை வெளியிட்டிருக்கிறது ஜியோ. இப்படியான ஒரு சேவையை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவன வருடாந்திர பொது குழுவில் அறிவித்திருந்தது ஜியோ. அதனைத் தொடர்ந்து, இந்தாண்டு நடைபெற்ற வருடாந்திர பொது குழுவில் புதிய ஏர்ஃபைபர் சேவையை செப்டம்பர் 19ம் தேதி (இன்று) வெளியிடவிருப்பதாக அறிவித்திருந்தார் முகேஷ் அம்பானி. திட்டமிட்டபடியே, தற்போது புதிய ஜியோ ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இது என்ன வகையான சேவை, என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது, என்ன விலையில் வெளியாகியிருக்கிறது? பார்க்கலாம்.
ஜியோ ஏர் ஃபைபர்:
வீட்டில் அதிவேக இணையதளத்தைப் பெற வயர்டு பிராடுபேண்டு சேவைகளை நம்மில் பலரும் பயன்படுத்தி வந்து கொண்டிருப்போம். ஜியோவின் வயர்டு பிராடுபேண்டு சேவையான ஜியோ ஃபைபர் உள்ளிட்ட இணைய சேவைக்கு மாற்றாக வயர்லெஸ் பிராடுபேண்டு சேவையை ஏர்ஃபைபர் மூலம் வழங்கவிருக்கிறது ஜியோ. முன்னதாக கடந்த மாதமே இதேபோன்ற ஏர்ஃபைபர் சேவையை ஏர்டெல் நிறுவனமும் வழங்கத் தொடங்கியது. ஆனால், 100MBps வரையிலான வேகத்தில் மட்டுமே அந்த சேவையை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் வழங்கி வருகிறது ஏர்டெல். தங்களுடைய ஏர்ஃபைபர் சேவையின் மூலம் 1GBps வரையிலான வேகத்தில் இணைய சேவை அளிக்கவிருப்பதாக உறுதியளித்திருக்கிறது ஜியோ.
ஜியோ ஏர்ஃபைபரைப் பயன்படுத்துவது எப்படி?
இந்த ஜியோ ஏர்ஃபைபருக்கான சாதனத்தை பயன்படுத்த தனியாக இன்ஸ்டலேஷன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. பிற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைப் போல, ப்ளக் செய்து பயன்படுத்தத் தொடங்கிவிடலாம் என்பது தான் இதன் மிகச் சிறப்பான ஒரு வசதி. மேம்படுத்தப்பட்ட பேரண்டல் கண்ட்ரோல்கள், வை-பை 6 வசதி, சிரமமின்றி ஜியோ செட்டாப் பாக்ஸூடன் இணைத்துக் கொள்ளும் வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த ஜியோ ஏர்ஃபைபர். முதற்கட்டமாக, ஜியோவின் தடையில்லா 5G சேவையைப் பெற்றிருக்கும் முதல் கட்ட நகரங்களில் மட்டும் இந்த ஜியோ ஏர்ஃபைபரை சேவையை வழங்க திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஜியோ ஏர்ஃபைபர்: விலை
ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி, ரூ.100 முன்பதிவு கட்டணமாக செலுத்தி ஜியோ ஏர்ஃபைபர் சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவுக்கான கட்டணம் செலுத்தி பதிவு செய்தவுடன், ஏர்ஃபைபர் தொடர்பாக வாடிக்கையாளர்களை அழைத்து ஜியோ தகவல்களை வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஏர்ஃபைபருக்கான பிளான்கள், ரூ.599ல் தொடங்கி, ரூ.3,999 வரையிலான விலைகளில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. முதற்கட்டமாக, அகமதாபாத், சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், புனே மற்றும் மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் ஜியோ ஏர்ஃபைபர் சேவையை வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஜியோ. பிற நகரங்களுக்கு அடுத்த வரும் மாதங்களில் இந்த சேவையை அந்நிறுவனம் விரிவுபடுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.