இன்று காலை முதல் இந்தியா முழுவதும் முடங்கிய ஜியோ சேவைகள்; பின்னணி என்ன?
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று, இந்தியா முழுவதும் உள்ள ஜியோ பயனர்கள் திடீரென நெட்வொர்க் செயலிழப்பை சந்தித்தனர். இது சமூக ஊடகங்களில் பரவலான புகார்களுக்கு வழிவகுத்தது. செவ்வாய் காலை முதல் பல பயனர்கள் மொபைல் இணைப்பு மற்றும் இணைய சேவைகளில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். சேவை செயலிழப்பைக் கண்காணிக்கும் வலைத்தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, பாட்னா மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இருந்து புகார்கள் வருவதால், நண்பகலில் சிக்கல் அறிக்கைகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரித்தது. டவுன்டிடெக்டரின் தரவுகளின்படி, சுமார் 10,522 பயனர்கள் பிற்பகல் 12:08 மணிக்குள் நெட்வொர்க் பிழைகளைப் புகாரளித்துள்ளனர்.
ஜியோ முடங்கியதற்கான காரணம்
ஜியோ முடங்கியதால் சிக்கலை எதிர்கொண்டவர்களில் 65% பயனர்கள் நோ சிக்னல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்றும், 19% பேர் மொபைல் இணைய இணைப்பில் சிரமப்படுவதாகவும், 16% பேர் ஜியோ ஃபைபர் சேவைகளில் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர் என்று டவுன்டிடெக்டரின் அறிக்கையின் மூலம் தெரிகிறது. ரிலையன்ஸ் ஜியோ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "மும்பையில் உள்ள சில ஜியோ வாடிக்கையாளர்கள் சிறிய தொழில்நுட்ப சிக்கல்களால் தடையற்ற சேவைகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். அவை தீர்க்கப்பட்டு, ஜியோவின் தடையற்ற சேவைகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளன. எங்கள் சந்தாதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்." எனத் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள அதன் டேட்டா செண்டரில் ஏற்பட்ட தீ விபத்தே இந்த சிக்கலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.