ஒரே ஆண்டில் 7 விண்கலங்களை விண்ணில் செலுத்தத் திட்டம்; இஸ்ரோவின் மெகா திட்டம்; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் விக்ரம்-1 விண்கலத் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த நிதியாண்டில் தனது மிக பரபரப்பான திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த நடப்பு நிதியாண்டிற்குள் குறைந்தபட்சம் 7 முக்கிய விண்கலங்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதன் தலைவர் வி.நாராயணன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதில் அடுத்த விண்கல சோதனை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தொடங்கவுள்ளது.
செயற்கைக்கோள்
தயாராகும் செயற்கைக்கோள்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம்
இஸ்ரோ தற்பொழுது திட்டமிட்டுள்ள இந்த 7 விண்கலத் திட்டங்களும் இந்தியாவின் விண்வெளி இலக்குகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களின் முழு விபரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், இதில் மேம்பட்ட புவி கண்காணிப்பு, தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப விளக்க செயற்கைக்கோள்கள் இடம்பெற்றுள்ளன.
தற்பொழுது இரண்டு செயற்கைக்கோள்கள் முழுமையாகத் தயாராக உள்ள நிலையில், மீதமுள்ள 5 முதல் 6 செயற்கைக்கோள்களின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ககன்யான்
ககன்யான் திட்டத்தின் மனிதனில்லா விண்கலப் பரிசோதனை
இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த விண்வெளித் திட்டங்களிலேயே மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவது இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் ஆகும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக விண்ணிற்கு அனுப்பித் திரும்பக் கொண்டுவருவதற்கான விண்கல காப்ஸ்யூல் மற்றும் அவசரகால பாதுகாப்பு அமைப்புகளை சோதிப்பதற்காக, மனிதர்கள் இல்லாத முதல் சோதனை விண்கலப் பயணம் இந்த ஆண்டு நடத்தப்படவுள்ளது.
விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு முன்னால் நடத்தப்படும் இந்த இறுதி கட்ட சோதனை இதுவாகும்.
புதிய ஏவுதளம்
தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்
விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளின் எண்ணிக்கையைத் தங்கு தடையின்றி அதிகரிப்பதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதன்மை ஏவுதளம் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை இந்த நிதியாண்டிற்குள் முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர இஸ்ரோ தீவிரமாக முயன்று வருகிறது.
இந்த புதிய ஏவுதளம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், சிறிய மற்றும் வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களை மிக அதிவேகமாகவும், குறைந்த செலவிலும் விண்ணில் செலுத்த முடியும் என்று விண்வெளி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் ஸ்டார்ட்அப்
400க்கும் மேற்பட்ட தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப்கள் வளர்ச்சி
இந்திய விண்வெளித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவேகமாக அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசுகையில், இந்தியாவில் முன்பு ஒரே ஒரு தனியார் நிறுவனமாகத் தொடங்கிய விண்வெளி ஸ்டார்ட்அப் ஈக்கோசிஸ்டம், தற்பொழுது 400க்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட்அப்களாக பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த 7 திட்டங்களின் இலக்கை இஸ்ரோ இந்த ஆண்டு வெற்றிகரமாக எட்டும்பட்சத்தில், உலக விண்வெளி வர்த்தக சந்தையில் இந்தியா புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.