
ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு?
செய்தி முன்னோட்டம்
சந்திரயான் 3யைத் தொடர்ந்து, ஆதித்யா L1 என்ற சூரியனை ஆய்வு செய்வதற்கான அடுத்த திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது இஸ்ரோ. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் முதல் வாரம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதித்யா L1 ஆய்வுக்கலனை, பூமி மற்றும் சூரியனுக்கிடையே உள்ள லெக்ராஞ்சு புள்ளி 1ன் (L1) அருகே ஹேலோ சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ.
இந்தப் புள்ளியில் இருந்து ஒரு வருடத்தின் அனைத்து நாட்களிலும், அனைத்து நேரமும் எந்தத் தடையுமின்றி சூரியனையும், தட்ப வெப்ப நிலையில் அதன் தாக்கத்தையும் ஆய்வு செய்ய முடியும்.
இந்த ஆதித்யா L1 திட்டம் தான், சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ செயல்படுத்தும் முதல் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதித்யா L1
நான்கு மாதப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆதித்யா L1:
ஆதித்யா L1-ஐ முதலில் பூமியின் குறைந்த உயர சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதன் உயரத்தை அதிகரித்து பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து வெளியேற்றத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ.
அதாவது, சந்திரயான் 3 திட்டத்திற்கு என்ன விதமான செயல்பாடு மேற்கொள்ளப்பட்டதோ, அதே செயல்பாட்டையே ஆதித்யா L1 திட்டத்திற்கும் மேற்கொள்ளவிருக்கிறது இஸ்ரோ.
மேற்கூறிய வகையில், ஆதித்யா L1 நிலைநிறுத்தப்படவிருக்கும் L1 பகுதியானது, பூமியில் இருந்து 1.5கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.
எனவே, பூமியில் இந்து விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து நான்கு மாத பயணத்திற்குப் பிறகே, குறிப்பிட்ட சுற்று வட்டப்பாதையை ஆதித்யா L1 விண்கலம் அடையும்.
இஸ்ரோ
எதற்காக இந்த ஆதித்யா L1 திட்டம் செயல்படுத்தப்படுகிறது?
சூரியனின் கொரோனா வெப்பமடைதல், சூரியக் காற்று, கொரோனல் மாஸ் எஜெக்ஷன், சூரிய புயல் மற்றும் பூமியின் வானிலை மாற்றத்தில் சூரியனின் பங்கு ஆகியவை குறித்து ஆய்வு செய்யவும் அவற்றைப் பற்றிப் புரிந்து கொள்ளவும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ.
ஆதித்யா L1 விண்கலத்தில் பொருத்தப்படவிருக்கும் மின்காந்தம், துகள்கள் மற்றும் காந்தப் புலம் ஆகியவற்றை உணரும் கருவிகளைக் கொண்டு, சூரியனின் மூன்று வளிமண்டல அடுக்குகளான ஒளிமண்டலம் (Photosphere), குரோமோமண்டலம் (Chromosphere) மற்றும் கொரோனா ஆகியவற்றை ஆய்வு செய்யவிருக்கிறது ஆதித்யா L1.
ஆதித்யா L1-ல் பொருத்தப்படவிருக்கும் 7 கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாகப் பார்வையிடும் வகையிலும், 3 கருவிகள் அங்கேயே ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆதித்யா L1
இந்தியாவில் உருவாக்கப்பட்ட அறிவியல் சாதனம்:
இத்திட்டத்தில் பயன்படுத்தப்படவிருக்கும் முக்கியமான அறிவியல் உபகரணங்களுள் ஒன்றான SUIT (Solar Ultraviolet Imaging Telescope) தொலைநோக்கியானது, இந்தியாவின் புனேவில் உள்ள Inter-University Center for Astronomy and Astrophysics மையத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொலைநோக்கியன் உதவியுடன், 2000 முதல் 4000 அங்ஸ்ட்ராம் வரையிலான அலைவரிசை எல்லையில் சூரியனின் முழு வட்டுப் புகைப்படங்களை (Full Disk Images) நம்மால் படம்பிடிக்க முடியும்.
இந்த மொத்த அலைவரிசை எல்லைக்குள்ளுமான முழு வட்டுப் புகைப்படங்களை இதுவரை யாரும் படம்பிடித்ததில்லை எனத் தெரிவித்துள்ளார், மேற்கூறிய SUIT சாதனத்தின் உருவாக்கத்திற்கு உதவி செய்திருக்கும் பேராசிரியர் ராம்பிரகாஷ்.
இஸ்ரோ
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் உதவியை நாடும் இஸ்ரோ:
ஆதித்ய L1 விண்கலத்தால் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடியும். ஆனால், பூமியில் இருக்கும் எந்தவொரு ஆய்வு நிலையத்தாலும், ஆதித்யா L1 உடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியாது.
எனவே, ஐரோப்பிய விண்வெளி மையத்தின் உலகளாவிய தொடர்பு வலைப்பின்னலின் உதவி தேவை. இந்தத் தொடர்பு வலைப்பின்னலின் உதவியுடன் ஆதித்யா L1-ல் இருந்து தகவல்களை தடையின்றி பெறவும், ஆதித்யா L1-க்கான கட்டளைகளை அனுப்பவும் முடியும்.
இந்த ஆதித்யா L1 விண்கலமானது ஏவுதலுக்கு தயாராக, இந்த மாதத் தொடக்கத்திலேயே ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திற்கு சென்று சேர்ந்திருப்பதை உறுதி செய்திருக்கிறது இஸ்ரோ.
PSLV ராக்கெட் மூலம் இந்த ஆதித்யா L1 விண்கலமானது அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.