விக்ரம் லேண்டரின் '3D Anaglyph' புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ
நிலவின் தென்துருவப் பகுதியில் நிலை கொண்டிருக்கும், சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் 3D 'அனாகிளிஃப்' புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது இஸ்ரோ. ஒரு பொருளை இரண்டு அல்லது பல கோணங்களிலிருந்து படம்பிடித்து 3D-யாக வழங்கும் புகைப்படங்களையே அனாகிளிஃப் புகைப்படங்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். விக்ரம் லேண்டரின் இந்தப் புகைப்படத்தை, பிரஞ்யான் ரோவரில் உள்ள நேவிகேஷன் கேமராவின் (NavCam) உதவியுடன் படம்பிடித்திருக்கிறது இஸ்ரோ. NavCam-ன் ஸ்டீரியோ இமேஜஸ் மூலம், வலது மற்றும் இடது பக்கங்களிலிருந்து தனித்தனியாகப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு ஒன்றாகக் கோர்க்கப்பட்டு, ஒரே புகைப்படமாக காட்சிப்படுத்தியிருக்கின்றனர். இந்தப் புகைப்படத்தில், சிவப்பு, நீலம் மற்றும் பச்சை ஆகிய சேனல்கள் தனித்தனி படங்களில் பொருத்தப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டுள்ள காரணத்தால் ஸ்டீரியோ புகைப்படமாகக் காட்சியளிக்கிறது.
நிலவில் சந்திரயான் 3:
இஸ்ரோ வெளியிட்டிருக்கும் இந்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை 3Dயில் காண சிவப்பு மற்றும் சியான் நிறங்களைக் கொண்ட 3D கண்ணாடியைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தங்களுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறது இஸ்ரோ. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரஞ்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர்கள் துயில் நிலைக்குச் செல்லவிருப்பதாக அறிவித்திருந்தது இஸ்ரோ. மேலும், நிலவில் திட்டமிடப்படாத ஹாப் பரிசோதனை ஒன்றையும் விக்ரம் லேண்டரை வைத்து மேற்கொண்டது இஸ்ரோ. துயில் நிலைக்குச் செல்வதற்கு முன்பு, தான் சேகரித்த தகவல்களை ரோவரும் லேண்டரும் இஸ்ரோ மையத்திற்கு அனுப்பியிருப்பதாகவும் இந்திய விண்வெளி நிறுவனம் தன்னுடைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தது. பிரஞ்யான் அனுப்பிய புகைப்படங்களை செயல்முறைக்கு உட்படுத்தி, தற்போது இந்த 3D அனாகிளிஃப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது இஸ்ரோ.