Loading...
ISRO-விலிருந்து கொத்தாக வெளியேறும் சீனியர் விஞ்ஞானிகள்; சந்திரயான்-3, ககன்யான் முக்கிய புள்ளிகள் ராஜினாமா
ISRO-விலிருந்து கொத்தாக வெளியேறும் சீனியர் விஞ்ஞானிகள்

ISRO-விலிருந்து கொத்தாக வெளியேறும் சீனியர் விஞ்ஞானிகள்; சந்திரயான்-3, ககன்யான் முக்கிய புள்ளிகள் ராஜினாமா

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2026
04:48 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து சமீபகாலமாக அனுபவம் வாய்ந்த மூத்த விஞ்ஞானிகள் அதிகளவில் (120 விஞ்ஞானிகள்) தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்தியாவின் மிக உயரிய விண்வெளித் திட்டங்களான ககன்யான் மனித விண்வெளி பயணம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு (VRS) விதிகளில் மத்திய விண்வெளித் துறை (DoS) கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இஸ்ரோவில் மொத்தம் 14,600 பணியாளர்கள் உள்ள நிலையில், இந்த 120 பேரின் வெளியேற்றம் எண்ணிக்கை அளவில் சிறியதாகத் தெரிந்தாலும், இவர்கள் அனைவரும் இந்தியாவின் 'கனவுத் திட்டங்களின்' தூண்களாக இருந்தவர்கள் என்பதால் விண்வெளித் துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ராஜினாமா

கொத்தாக வெளியேறும் 120-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள்

இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக விபரங்களை வெளியிடாவிட்டாலும், நம்பகமான வட்டாரங்களின்படி கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 100 முதல் 120 விஞ்ஞானிகள் இஸ்ரோவில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து மட்டும் சுமார் 80 விஞ்ஞானிகள் வெளியேறியுள்ளனர். திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலிருந்து சுமார் 20 விஞ்ஞானிகள் விடைபெற்றுள்ளனர்.

வெளியேறியவர்களில் இஸ்ரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை வழிநடத்திய மூத்த விஞ்ஞானிகளும் அடங்குவர்.

விக்டர் ஜோசப் (இஸ்ரோவின் பிரம்மாண்ட LVM3 ராக்கெட் திட்டத்தின் இயக்குநர், ஸ்பேடெக்ஸ் திட்ட இயக்குநர், ஆதித்யா ரல்லபள்ளி (சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்குவதற்கான 1 லட்சத்திற்கும் மேற்பட்ட 'சிமுலேஷன்' சோதனைகளைச் செய்து, 25 டெராபைட் தரவுகளை உருவாக்கித் தந்த முதன்மை விஞ்ஞானி) ஆகியோரும் அடங்குவர்.

விதிகள்

மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய விதிகள்

புதிய விதிகளின்படி, கடந்த 2020 நவம்பரில் கொண்டு வரப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தத்தின்படி, இஸ்ரோவின் அந்தந்த மைய இயக்குநர்களே விஞ்ஞானிகளின் ராஜினாமாவை ஏற்க அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ககான்யான் மற்றும் பிற முக்கிய திட்டங்களில் பணியாற்றும் குரூப் 'A' பிரிவு விஞ்ஞானிகள் அளிக்கும் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு கடிதங்களை மைய இயக்குநர்கள் இனி நேரடியாக ஏற்கக் கூடாது.

அந்தந்த திட்டங்கள் முழுமையாக முடியும் வரை விஞ்ஞானிகளை விடுவிக்கக் கூடாது.

மிக அத்தியாவசிய காரணங்கள் இருந்தால், அந்த விண்ணப்பங்களை இறுதி ஒப்புதலுக்காக டெல்லியில் உள்ள மத்திய விண்வெளித் துறைக்கு (DoS) அனுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

விளக்கம்

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் விளக்கம்

இந்தத் தொடர் ராஜினாமாக்கள் குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், "பலர் நிறுவனங்களை விட்டு வெளியேறுவது சாதாரணமான ஒன்றுதான். இந்த புதிய விதியானது விஞ்ஞானிகளைத் தடுத்து வைப்பதற்காக மட்டுமின்றி, நாட்டின் முக்கியத் திட்டங்கள் திடீரெனத் தொய்வடைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவர் சென்றால் மற்றொருவர் அந்தப் பொறுப்பை ஏற்பார், இஸ்ரோ இதனைச் சீராகக் கையாண்டு வருகிறது" என்று நிலைமையை விளக்கினார்.

இஸ்ரோவில் ஏற்கனவே காலியாக உள்ள 1,050-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வந்தாலும், பல ஆண்டுகள் அனுபவமும் விண்வெளித் திட்ட நுணுக்கங்களும் வாய்ந்த விஞ்ஞானிகளின் இழப்பை ஈடுசெய்வது எளிதல்ல என்பதை உணர்ந்தே மத்திய அரசு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT