விண்வெளி வரலாற்றில் இஸ்ரோ செய்த உலக சாதனை தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயர்த்திய பல சாதனைகளை படைத்துள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்றான, ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய நிகழ்வு உலக சாதனை புரிந்துள்ளது. அதிக எடை கொண்ட சாட்டிலைட்டை சுமந்து சென்று LVM3-M6 விண்ணுக்கு ஏவிய சாதனையை இன்று ISRO வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ள இந்த தருணத்தில் அந்த உலக சாதனையை பற்றி ஒரு பார்வை:
சாதனை
இஸ்ரோவின் உலக சாதனைப் பயணம்
இஸ்ரோவின் நம்பிக்கைக்குரிய 'ஒர்க்ஹார்ஸ்' (Workhorse) என்று அழைக்கப்படும் PSLV-C37 கடந்த பிப்ரவரி 15, 2017 விண்ணுக்கு வெற்றிகரமாக பாய்ந்தது. அதனுடன் 104 செயற்கைகோள்களை ஏற்றி சென்றது. இந்த 104 செயற்கைக்கோள்களில் இந்தியாவின் 'கார்டோசாட்-2' (Cartosat-2) முதன்மையானது. மீதமுள்ள 103 செயற்கைக்கோள்கள் அமெரிக்கா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், கஜகஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்தவை. இதற்கு முன்பு 2014-ல் ரஷ்யா ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களை ஏவியதே உலக சாதனையாக இருந்தது. அதனை முறியடித்து, இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை ஏவி புதிய சரித்திரம் படைத்தது.
சிறப்பம்சங்கள்
இந்த பயணத்தின் சிறப்பம்சங்கள்
சுமார் 1,378 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள்கள் அனைத்தையும் வெறும் 18 நிமிடங்களில் விண்வெளியில் அந்தந்த சுற்றுப்பாதையில் மிகத் துல்லியமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது. இந்த வெற்றியின் மூலம் குறைந்த செலவில் அதிக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் நாடாக இந்தியா உருவெடுத்தது. இது இந்தியாவின் வணிக ரீதியான விண்வெளி வாய்ப்புகளை (NSIL மூலம்) பன்மடங்கு அதிகரித்தது. இது தவிர சந்திரயான்-3, ஆதித்யா-L1, ககன்யான் உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 1969-ல் தொடங்கப்பட்ட இஸ்ரோ, இன்று உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் மிகக் குறைந்த செலவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்வெளியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.