ஒரு சிறிய லூஸ் கனெக்ஷன்! இஸ்ரோவின் NVS-02 செயற்கைக்கோள் இலக்கை அடையாதது ஏன்? உயர்மட்டக் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட் மூலம் NVS-02 என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 100 வது ராக்கெட் என்ற பெருமையைப் பெற்றது. விண்ணில் ஏவப்பட்ட பிறகு, செயற்கைக்கோள் வெற்றிகரமாக நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இருப்பினும், அங்கிருந்து அதன் புவிவட்டப் பாதையை உயர்த்தி வட்டப்பாதைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த செயற்கைக்கோள் திட்டமிட்ட இலக்கை அடைய முடியாமல் போனது.
தொழில்நுட்பக் கோளாறு
உயர்மட்டக் குழு கண்டறிந்த தொழில்நுட்பக் கோளாறு
இந்தத் தோல்வி குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது. அக்குழு தற்போது சமர்ப்பித்துள்ள அறிக்கையில், செயற்கைக்கோளின் பாதையை உயர்த்துவதற்குத் தேவையான என்ஜினை இயக்குவதில் சிக்கல் இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, என்ஜினுக்கு எரிபொருளை அனுப்பும் பைரோ வால்வு செயல்படவில்லை. இதற்கு அந்த வால்வை இயக்குவதற்கான மின் சிக்னல் அதைச் சென்றடையாததே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிக்னல் குறைபாடு
லூஸ் கனெக்ஷன் மற்றும் சிக்னல் குறைபாடு
இந்தக் கோளாறு ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக விளக்கியுள்ள நிபுணர்கள், மின் இணைப்பில் ஏற்பட்ட 'லூஸ் கனெக்ஷன்' (Disengagement of contacts) தான் அடிப்படைப் பிரச்சினை என்று தெரிவித்துள்ளனர். முதன்மை மற்றும் காப்பு (Main and Redundant) என இரண்டு இணைப்புப் பாதைகளிலும் குறைந்தபட்சம் ஒரு தொடர்பாவது துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், கட்டளை அனுப்பப்பட்டும் வால்வு திறக்கப்படவில்லை, இதன் விளைவாக என்ஜின் எரியாமல் செயற்கைக்கோள் தனது பாதையை உயர்த்த முடியாமல் போனது.
நடவடிக்கை
திருத்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சிஎம்எஸ்-03 வெற்றி
இந்தத் தொழில்நுட்பக் கோளாறிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட இஸ்ரோ, எதிர்காலத் திட்டங்களுக்காகச் சில முக்கியப் பரிந்துரைகளைச் செய்தது. இந்தப் பரிந்துரைகள் கடந்த 2025 நவம்பர் 2 ஆம் தேதி ஏவப்பட்ட சிஎம்எஸ்-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளில் செயல்படுத்தப்பட்டன. அதில் பைரோ அமைப்புகள் எந்தவிதமான சிக்கலுமின்றி மிகச்சிறப்பாகச் செயல்பட்டன. இதன் மூலம் NVS-02 திட்டத்தில் ஏற்பட்ட தவறு கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இனிவரும் இஸ்ரோவின் அனைத்து விண்வெளி திட்டங்களிலும் இந்த புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.