ககன்யான் திட்ட வீரர்களை மீட்கும் ஒத்திகையின் இரண்டாம் நிலையை தொடங்கியிருக்கும் இஸ்ரோ
செய்தி முன்னோட்டம்
கடந்த ஜூலை-14ல் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
சந்திரயான் நிலைவை நோக்கிய பயணத்தை தற்போது மேற்கொண்டிருக்கும் நிலையில், மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் தங்களது முதல் திட்டமான ககன்யானுக்கும் தயாராகி வருகிறது இஸ்ரோ.
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் சென்று பூமிக்குத் திரும்பும் விண்வெளி வீரர்களை கடலில் விழ வைக்கப்பட்டு, அதன் பின்னரே அவர்களை மீட்கும் பணி நடைபெறும்.
இந்த நடைமுறையின் முதன் நிலை ஒத்திகை நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் நிலை ஒத்திகையைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.
இந்த ஒத்திகைகளானது விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கப்பற்படைத் தளத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒத்திகைகளில் சிறப்பான செயல்பாட்டை ஒத்திகை குழுவினர் வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ.
ககன்யான்
ககன்யான் திட்டத்தின் குறிக்கோள் என்ன?
தற்போது வரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளே விண்வெளிக்கும் சுயமாக தங்கள் ராக்கெட்டின் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பியிருக்கின்றனர்.
மேற்கூறிய நாடுகளைத் தொடர்ந்து சொந்த ராக்கெட்டின் மூலம், நம் நாட்டு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் தான் இஸ்ரோவின் ககன்யான் திட்டம்.
பூமியில் இருந்து 400 கிமீ தூர சுற்று வட்டப் பாதைக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி மூன்று நாட்களுக்குப் பின்னர் பத்திரமாக மீண்டும் அவர்களை பூமியில் தரையிறக்குவது தான் ககன்யான் திட்டத்தின் குறிக்கோள்.
இந்தத் திட்டமானது அடுத்த 2024 இறுதியில் செயல்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு, சோதனைக்காக இரண்டு முறை மனிதர்கள் இல்லாமலும் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவிருக்கிறது இஸ்ரோ.