இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஆபத்து! 1.75 கோடி பேரின் ரகசிய தகவல்கள் கசிவு
செய்தி முன்னோட்டம்
இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள சுமார் 1.75 கோடி பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் ஹேக்கர்கள் பயன்படுத்தும் தளங்களில் கசிந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் ஏபிஐ (API) கட்டமைப்பில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தத் தரவுகள் திருடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 'சோலோனிக்' (Solonik) என்ற பெயரில் இயங்கும் ஒரு பயனர், இந்தத் தரவுகளை 'பிரீச் போரம்ஸ்' (BreachForums) எனும் தளத்தில் இலவசமாக பகிர்ந்துள்ளார். பயனர்களின் கடவுச்சொற்கள் (Passwords) திருடப்படவில்லை என்றாலும், கசிந்துள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் போலியான தகவல்களை அனுப்பி கணக்குகளை முடக்க முயலக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மறுப்பு
தரவு கசிவு குறித்து மெட்டா மௌனம்
பயனர்கள் தங்களின் அனுமதியின்றி 'பாஸ்வேர்ட் ரீசெட்' (Password Reset) தொடர்பான மின்னஞ்சல்களைப் பெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த தரவு கசிவு குறித்து இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை. இருப்பினும், பயனர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகத் தங்களின் இன்ஸ்டாகிராம் கடவுச்சொல்லை உடனடியாக மாற்றவும், 'டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷன்' (Two-factor authentication) முறையை செயல்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவையற்ற குறுஞ்செய்திகளில் வரும் லிங்க்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள ஒரு தளத்தில் இவ்வளவு பெரிய தரவு கசிவு ஏற்பட்டுள்ளது இணையப் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் அதிகரித்துள்ளது.