LOADING...
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தோனேசியாவும் அதிரடி: 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை
இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தோனேசியாவும் அதிரடி: 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 06, 2026
03:34 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இந்தோனேசியாவும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது. ஆன்லைன் ஆபாசப் படங்கள், இணையவழி மோசடிகள், சைபர் புல்லியிங் மற்றும் இணைய அடிமைத்தனத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மியுட்டியா ஹஃபிட் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்கள் இங்கே:-

காலக்கெடு

முடக்கப்படவுள்ள தளங்கள் மற்றும் காலக்கெடு

இந்தத் தடை உத்தரவு மார்ச் 28, 2026 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, அதிக ஆபத்துள்ளதாகக் கருதப்படும் பின்வரும் தளங்களில் உள்ள 16 வயதிற்குட்பட்டவர்களின் கணக்குகள் படிப்படியாக முடக்கப்படும்: யூடியூப், டிக்டாக், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், எக்ஸ், த்ரெட்ஸ், பிகோ லைவ் (Bigo Live) மற்றும் ரோப்லாக்ஸ். டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து இந்த விதிகளை அமல்படுத்தப்போவதாகவும், இது பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கண்காணிக்க உதவும் ஒரு பெரும் முயற்சி என்றும் அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் அவசரநிலை

டிஜிட்டல் அவசரநிலை குறித்து அரசின் விளக்கம்

அமைச்சர் மியுட்டியா ஹஃபிட் இது குறித்துப் பேசுகையில், "அல்காரிதம்களின் ராட்சதர்களிடம் இருந்து பெற்றோர்கள் தனியாகப் போராடுவதை நிறுத்த அரசு களமிறங்கியுள்ளது. இது ஒரு டிஜிட்டல் அவசரநிலை. தொழில்நுட்பம் மனிதனை மனிதனாக மாற்ற வேண்டுமே தவிர, குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பலி கொடுக்கக்கூடாது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தொடக்கத்தில் இது சில அசௌகரியங்களை ஏற்படுத்தினாலும், எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்காக இது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

உலகளாவிய போக்கு

உலகளவில் இதேபோன்ற நடவடிக்கைகள்

கடந்த டிசம்பர் மாதம், ஆஸ்திரேலியா இத்தகைய தடையை முதன்முதலில் அமல்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், சமூக வலைதளங்களின் மோசமான பாதிப்புகளுக்கு "இத்துடன் போதும்" என முற்றுப்புள்ளி வைக்க இந்தச் சட்டம் உதவும் என்று கூறியிருந்தார். தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறது. மேலும் பிரான்ஸ் ஏற்கனவே தனிப்பட்ட முறையில் சட்டம் இயற்றுவதற்கான பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement