அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஹேக்கர்ஸ் குழு ஒன்று, இந்தியாவில் இணையத் தாக்குதல் நிகழ்த்தப் போவதாக, எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தியன் சைபர் கிரைம் கோ-ஆர்டினேஷன் சென்டர். அந்த அறிக்கையில், இந்தியாவைச் சேர்ந்த 12,000 அரசு இணையதளங்கள் மீது இந்தோனேஷியா ஹேக்கர்ஸ் குழு தாக்குதல் நடத்தவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. "பல மத்திய மற்றும் மாநில அரசு இணையதளங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தலாம். எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க வேண்டும்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Denial of Services (DoS) வகை இணையத் தாக்குதலை அவர்கள் மேற்கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை இணையத் தாக்குதலில் பாதிக்கப்படும் கணினிகளை, தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் செயலிழக்க செய்துவிடும்.
இலக்காகும் இந்தியா:
இந்தியாவின் மீது இணையத் தாக்குதல் நிகழ்த்துவது இது முதல் முறை அல்ல. கடந்த 2022-ல் இந்திய அரசு இணையதளங்களின் மீது, 19 முறை ரேன்சம்வேர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட, மூன்று மடங்கு அதிகம். கடந்த ஆண்டு, முகம்மது நபிகள் குறித்து கருத்து கூறியதற்காக, மலேசியாவைச் சேர்ந்த டிராகன்ஃபோர்ஸ் என்ற ஹேக்கர்கள் குழு, இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக இணையதளம் உட்பட பல அரசு இணையதளங்களின் மீது இணையவழித் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இணையத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், "இணையத்தை ஹேக்கர்களிடம் சிக்காமல் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?" உள்ளிட்ட வழிமுறைகளை சமீபத்தில் வழங்கியிருக்கிறது, இந்தியன் சைபர்கிரைம் கோ-ஆர்டினேஷன் சென்டர்.