மத்திய அரசின் புதிய ஐடி விதிமுறையால் கிரியேட்டர்கள் ஷாக்; வருவாய் இழப்பு குறித்து அச்சம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் சட்டவிரோதமான அல்லது தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பு சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்க வழங்கப்பட்ட 36 மணி நேர அவகாசம், தற்போது வெறும் 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறை மாற்றமானது, இந்தியாவின் கிரியேட்டர் பொருளாதாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்
கிரியேட்டர்களின் அச்சம் என்ன?
இந்தக் குறுகிய காலக்கெடுவால் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் ஏஜென்சிகள் கடும் கவலையில் உள்ளனர். குறிப்பாக, டீப்ஃபேக் போன்ற சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்குவது நோக்கமாக இருந்தாலும், சாதாரண வீடியோக்களும் தவறுதலாகக் கண்டறியப்பட்டு 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. பிராண்ட் விளம்பரங்களின் போது வீடியோக்கள் தவறுதலாக நீக்கப்பட்டால், அந்த ஒப்பந்தங்கள் ரத்தாகி கிரியேட்டர்களுக்குப் பெரும் வருமான இழப்பு ஏற்படும். நள்ளிரவில் ஒரு வீடியோ குறித்துப் புகார் வந்தால், 3 மணி நேரத்திற்குள் அதற்குப் பதிலளிப்பது சிறு தொழில் முனைவோருக்கு சாத்தியமற்றது.
சிக்கல்கள்
ஏஐ மற்றும் மொழிச் சிக்கல்கள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் இருப்பதால், பிராந்திய மொழிகளில் (தமிழ், மராத்தி போன்றவை) பதிவிடப்படும் நையாண்டி அல்லது நகைச்சுவை வீடியோக்களை ஏஐ மென்பொருள்கள் தவறாகப் புரிந்துகொண்டு நீக்கிவிடும் அபாயம் இருப்பதாக கிரியேட்டர்கள் அச்சத்தில் உள்ளனர். "முதலில் நீக்கு, அப்புறம் பேசலாம்" என்ற மனநிலை தளங்களுக்கு வந்துவிட்டால், கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
ஏஜென்சிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த புதிய சிக்கலை எதிர்கொள்ள விளம்பர ஏஜென்சிகள் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கோப்ளூயன்ஸ் மற்றும் சிஎச்டிஆர் பாக்ஸ் போன்ற நிறுவனங்கள், வீடியோக்களைப் பதிவிடும் முன்பே அவற்றை சரிபார்க்கும் முறைகளை உருவாக்கி வருகின்றன. மேலும், வீடியோக்களில் ஏஐ பயன்படுத்தப்பட்டிருந்தால் கட்டாயம் லேபிள் ஒட்ட வேண்டும் என்ற விதியும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஃபேஷன் மற்றும் கலை சார்ந்த வீடியோக்களின் தரத்தைப் பாதிக்கலாம் என்றும் கிரியேட்டர்கள் கருதுகின்றனர்.