உலகளவில் அதிவேக இணைய வசதி வழங்கும் நாடுகள் பட்டியலில் 72 இடங்கள் முன்னேறிய இந்தியா
உலகளவில் அதிகவேக இணைய சேவை வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் 72 இடங்கள் முன்னேறி 47வது இடத்தை அடைந்திருக்கிறது இந்தியா. இந்தியாவில் 5G சேவைகள் வழங்கத் தொடங்கப்பட்டதையடுத்து இந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது இந்தியா. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதமே (சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு) இந்தியாவில் 5G சேவைகளை அளிக்கத் தொடங்கின இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோவும், ஏர்டெல்லும். இந்தியாவின் சராசரி இணைய வேகமானது, கடந்தாண்டு 13.87 Mbps ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 50.21 Mbps ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு ஜியோ மற்றும் ஏர்டெல்லின் நாடு தழுவிய 5G சேவைக் கட்டுமானமே காரணம்.
இந்தியாவில் அதிவேக சேவையைக் கொண்ட ஜம்மு காஷ்மீர்:
இந்தியாவில் ஜம்மூ காஷ்மீரிலேயே சராசரி இணைய வேகம் மிக அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150.96Mbps சராசரி வேகத்தைக் கொண்டிருக்கிறது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம். இந்தியாவில் 4G சேவையின் பதிவிறக்க வேகத்தை விட 5G சேவையின் வேகமானது மிக அதிகமாக 2,003% அதிகரித்திருக்கிறது. சராசரி 4G பதிவிறக்க வேகமானது 14.97 Mbps ஆக இருந்த நிலையில், 5G சேவையால் அது 316.24 Mbps அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இந்த அதிகவேக 5G சேவையானது, பிராண்டுபேண்டு வசதி கொடுக்க முடியாத தொலைதூர இடங்களிலும் வயர்லெஸ்ஸாக அதிவேக இணைய சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வழி வகுத்திருக்கின்றன.