ஏஐ சாட்பாட் பயன்படுத்தினால் தண்ணீர் பஞ்சமா? இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து! சிஇஇடபுள்யூ ஷாக் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பமானது உலக அளவில் மனிதர்களின் அன்றாட வேலைகளையும், வணிகக் கட்டமைப்புகளையும் மிக அதிவேகமாக மாற்றி அமைத்து வருகிறது. எளிய மின்னஞ்சல்களை எழுதுவது முதல் அதிநவீன சாட்பாட்கள் மற்றும் படங்களை உருவாக்குவது வரை ஏஐ-இன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த டிஜிட்டல் புரட்சிக்கு நாம் வெறும் பணத்தை மட்டும் விலையாகக் கொடுக்கவில்லை. மாறாக, நாட்டின் மிக அத்தியாவசிய இயற்கை வளங்களான மின்சாரம் மற்றும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரையும் சேர்த்து இழந்து வருகிறோம். இந்தியாவின் முன்னணி சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பான சிஇஇடபுள்யூ (CEEW) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை, இந்தியாவின் ஏஐ சூப்பர் பவர் கனவுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஆபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தண்ணீர் தேவை
ஏஐ தரவு மையங்களுக்கு தண்ணீர் ஏன் தேவைப்படுகிறது?
நாம் ஆன்லைனில் உள்ள ஏஐ சாட்பாட்களில் உள்ளீடு செய்யும் ஒவ்வொரு கேள்வியும் (Prompt), ஆயிரக்கணக்கான சர்வர்களைக் கொண்ட ஹைப்பர்ஸ்கேல் தரவு மையங்களில்தான் (Data Centres) செயலாக்கப்படுகின்றன. இந்த சர்வர்கள் இடைவிடாமல் வேலை செய்யும்போது மிகக் கடுமையான வெப்பத்தை வெளியிடுகின்றன. கணினிகள் பழுதடையாமல் இருக்க, இந்த மையங்களில் ஆவியாதல் குளிரூட்டும் முறைகள் (Evaporative Cooling Systems) பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் சர்வர்களின் வெப்பத்தை உறிஞ்சும் தண்ணீர், பின்னர் நீராவியாக வான்வெளியில் வாரி இறைக்கப்படுகிறது. சாட்ஜிபிடி-4 (ChatGPT-4) மாதிரியின் ஒருமுறை பயிற்சி கட்டத்திற்கு மட்டுமே சுமார் 59.2 கோடி லிட்டர் தண்ணீர் ஆவியாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
இந்தியாவின் ஏஐ வளர்ச்சியும் அதிகரிக்கப் போகும் தண்ணீர் தாகமும்
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் தரவு மையங்களின் திறன் கடந்த 2020 இல் 375 மெகாவாட்டாக இருந்த நிலையில், கடந்த 2025 இல் 1500 மெகாவாட்டாக அதிரடியாக உயர்ந்துள்ளது. இதுவே வரும் 2030 ஆம் ஆண்டில் 10,000 மெகாவாட் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. சிஇஇடபுள்யூ அறிக்கையின்படி, இந்தியாவின் தரவு மையங்கள் கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 150 பில்லியன் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளன. இது வரும் 2030 இல் 358 பில்லியன் லிட்டராக அசுர வளர்ச்சி பெறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண 100 மெகாவாட் ஏஐ மையத்திற்கு நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
கார்ப்பரேட் முதலீடு
பெரும் கார்ப்பரேட் முதலீடுகளும் நிலத்தடி நீர் அழுத்தமும்
இந்தியாவின் இந்த ஏஐ டிஜிட்டல் தேவையை மூலதனமாக்க கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் ரிலையன்ஸ் மெட்டா கூட்டமைப்பு போன்ற முன்னணி சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. கூகுள் நிறுவனம் விசாகப்பட்டினத்திலும், ரிலையன்ஸ் மெட்டா கூட்டணி சென்னையிலும் தங்களின் பிரம்மாண்ட ஏஐ மையங்களை அமைத்து வருகின்றன. தற்பொழுது இந்தியாவின் 65 சதவீதத்திற்கும் அதிகமான தரவு மையங்கள் மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் நொய்டா ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில்தான் குவிந்துள்ளன. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த நகரங்களில் இந்த மையங்கள் நிலத்தடி நீருக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
மாற்று வழிகள்
தவறான இடங்களில் அமையும் மையங்களும் மாற்று வழிகளும்
கடந்த 2019 இல் சென்னை சந்தித்த டே சீரோ (Day Zero) தண்ணீர் பஞ்சமும், 2024 இல் பெங்களூரு நகரில் ஏற்பட்ட கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நம் கண்முன்னே உள்ள உதாரணங்களாகும். இத்தகைய சூழலில், ஏற்கனவே வறட்சியான பகுதிகளில் நீர் நுகர்வு அதிகம் கொண்ட தரவு மையங்களை அமைப்பது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு மாற்றாக, தூய்மையான புதிய தண்ணீரைப் பயன்படுத்தாமல், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்துதல், கடல்நீரைக் குளிரூட்டப் பயன்படுத்துதல் மற்றும் மூடிய சுழற்சி திரவக் குளிரூட்டல் (Closed-loop liquid cooling) போன்ற மாற்று உத்திகளை அரசு உடனடியாகக் கட்டாயமாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.