இந்திய பழங்குடி மொழிகளுக்கான வாய்ஸ் AI: ஐஐஎஸ்சியின் ஸ்ரவாணி புதிய புரட்சி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உருவாக்கப்படும் வணிக ரீதியான வாய்ஸ் ஏஐ தொழில்நுட்பங்கள் அனைத்தும் பொதுவாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 முதன்மை மொழிகளை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இதனால் நாட்டின் தொலைதூரக் கிராமங்களில் வாழும் பழங்குடியின மக்கள் அரசின் டிஜிட்டல் சேவைகளைப் பெற முடியாமல் போகிறது. இந்த மிகப்பெரிய இடைவெளியைக் குறைப்பதற்காகப் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் (ஐஐஎஸ்சி) ஸ்பயர் லேப் மற்றும் ஆர்ட்பார்க் ஆகியவை இணைந்து, கூகுள் ஆதரவுடன் ஸ்ரவாணி (SraVaani) என்ற புதிய ஓபன்-சோர்ஸ் குரல் அறிதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரியை உருவாக்கியுள்ளன.
வட்டார மொழிகள்
65 இந்திய மொழிகள் மற்றும் வட்டார வழக்குகளைப் புரிந்துகொள்ளும் திறன்
தற்போது பயன்பாட்டில் உள்ள பல முன்னணி ஏஐ மாதிரிகள் பிரதான மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் வேளையில், ஸ்ரவாணி மாதிரியானது இந்தியாவில் பேசப்படும் 65 மொழிகள் மற்றும் வட்டார வழக்குகளைப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் இதுவரை எந்தவொரு வணிக ரீதியான குரல் அறிதல் அமைப்பும் அதிகாரப்பூர்வ ஆதரவு வழங்காத 44 அரிய பழங்குடி மற்றும் சிறுபான்மை மொழிகளும் அடங்கும்.
இத்தொழில்நுட்பத்தின் மூலம் தொலைதூரப் பகுதி விவசாயிகளும் தங்களின் சொந்த மொழியிலேயே அரசின் உதவிகளையும் தகவல்களையும் பெற முடியும்.
கட்டமைப்பு
31,000 மணிநேரக் குரல் தரவுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பு
இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட வாழும் மொழிகளும் ஆயிரக்கணக்கான வட்டார வழக்குகளும் உள்ளன.
ஸ்ரவாணி உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த வாணி திட்டத்தின் கீழ், நாட்டின் 165 மாவட்டங்களைச் சேர்ந்த 1.56 லட்சம் மக்களிடமிருந்து சுமார் 31,000 மணிநேரத்திற்கும் அதிகமான இயற்கை பேச்சுத் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.
எழுத்துகளைப் பார்த்து வாசிக்க வைக்காமல், படங்களைப் பார்த்து மக்கள் தங்களின் சொந்த வட்டார வழக்கில் பேசிய வார்த்தைகளை பதிவு செய்து இந்த பிரம்மாண்ட ஏஐ மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒப்பீடு
பிற முன்னணி வாய்ஸ் ஏஐ மாதிரிகளுடன் ஸ்ரவாணியின் ஒப்பீடு
இந்திய சந்தையில் சர்வம் ஏஐ நிறுவனத்தின் சாரஸ் மாதிரி 22 இந்திய மொழிகளிலும், லெவன்லேப்ஸ் நிறுவனம் 12 மொழிகளிலும் வணிக ரீதியான குரல் சேவைகளை வழங்கி வருகின்றன.
ஆனால் ஸ்ரவாணி மாதிரி குறைந்த தரவுகள் மட்டுமே கொண்ட காரோ போன்ற அரிய மொழிகளில் மிகத் துல்லியமான முடிவுகளைத் தருகிறது.
இருப்பினும் நீஷி மற்றும் சுமி போன்ற சில மொழிகளில் இதன் துல்லியம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்ஐடி
எம்ஐடி உரிமத்தின் கீழ் கிடைக்கும் இலவச ஓபன்-சோர்ஸ் மாதிரி
ஸ்ரவாணி மாதிரி எம்ஐடி உரிமத்தின் கீழ் இலவச ஓபன்-சோர்ஸ் மாடலாக வெளியிடப்பட்டுள்ளதால், புதிய தொழில்முனைவோர்களும், ஏஐ ஆராய்ச்சியாளர்களும் இதன் குறியீடுகளைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான அரிய மொழிகளுக்கான அப்ளிகேஷன்களை எளிதாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
வணிக சந்தை புறக்கணித்த இந்தியாவின் அரிய மொழிகளுக்கும் குரல் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்ததன் மூலம், இந்திய ஏஐ துறையில் ஸ்ரவாணி ஒரு புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.