இன்று வானில் தோன்றுகிறது 'ஹண்டர்ஸ் மூன்' சூப்பர் மூன்: இந்தியாவில் பார்க்கும் நேரம் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் மாதத்தில் தோன்றும் பௌர்ணமி நிலவு 'ஹண்டர்ஸ் மூன்' அல்லது 'வேட்டைக்காரன் நிலவு' என்று அழைக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் 11-வது முழு நிலவான இந்த ஹண்டர்ஸ் மூன், வழக்கமான பௌர்ணமி நிலவை விடச் சற்று அளவில் பெரியதாகவும், அதிக பிரகாசத்துடனும் இன்று வானில் காட்சியளிக்கவுள்ளது. பண்டைய காலத்தில் விவசாயிகள் அறுவடை காலத்தை முடித்த பிறகு, வயல்வெளிகள் வெட்டவெளியாக இருக்கும். அந்த சமயத்தில் நிலவொளியின் உதவியோடு விலங்குகளை எளிதாக வேட்டையாட முடியும் என்பதால், அக்டோபர் பௌர்ணமி நிலவுக்கு 'ஹண்டர்ஸ் மூன்' எனப் பெயரிடப்பட்டது. மேலும், நிலவொளியில் தானியங்களை உலர்த்தியதால் இதனை 'அரிசி நிலவு', 'அறுவடை நிலவு', 'சோள நிலவு' என்றும் கிராமப்புறங்களில் செல்லமாக அழைப்பது உண்டு.
விவரங்கள்
இந்தியாவில் எப்போது, எந்த நேரத்தில் பார்க்கலாம்?
இந்தியாவில் இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கிழக்கில் இந்த முழு நிலவு உதிக்கத் தொடங்கும்.
நிலவின் அழகை முழுமையாக ரசிக்க மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரையிலான நேரம் மிகவும் உகந்தது.
நிலவு அடிவானத்தில் உதிக்கும் போது வளிமண்டல ஒளி ஊடுருவல் காரணமாக லேசான ஆரஞ்சு அல்லது தங்க நிறச் சாயலில் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும்.
சூரிய கிரகணம் போல அல்லாமல், நிலவின் வெளிச்சம் முற்றிலும் பாதுகாப்பானது என்பதால் பொதுமக்கள் அனைவரும் வெறும் கண்ணால் இந்த ஹண்டர்ஸ் மூனைக் கண்டு ரசிக்கலாம்.
இருமடங்கு தெளிவாகப் பார்க்க விரும்புபவர்கள் பைனாக்குலர்களை பயன்படுத்தலாம்.
மேகமூட்டம் தடை விதிக்காத பட்சத்தில் இரவு முழுவதும் இந்த முழு நிலவைக் காண முடியும்.