அதிகரித்து வரும் கால் ஃபார்வர்டிங் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?
தினம் தினம் புதுப்புது தொழில்நுட்ப யுக்திகளோடு, நம்முடைய தகவல்களைத் திருட முயன்று வருகிறார்கள் ஆன்லைன் மோசடி நபர்கள். அவர்களது யுக்திகளைப் பற்றி அவ்வப்போது தெரிந்து கொண்டு அவற்றிலிருந்து நம்முடைய தகவல்களைப் பாதுகாப்பது எப்படி என்பதனையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தற்போது புதிய வகை கால் ஃபார்வர்டிங் (Call Forwarding) மோசடி ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகிறது. வழக்கம் போல இந்த மோசடியும் குறிப்பிட்ட நபர்களின் OTP மற்றும் வங்கித் தகவல்களைத் தெரிந்து கொண்டு அவற்றின் மூலம் பணத்தைத் திருடுவது தான். இந்த மோசடியில் ஈடுபவர்கள், குறிப்பிட்ட எண்களுக்கு அழைத்து, வங்கி அல்லது தொலைத் தொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுவது போல் பேசுவார்கள்.
கால் ஃபார்வர்டிங் மோசடி:
நம்முடைய நம்பிக்கையைப் பெற பல்வேறு தகவல்களைக் கூறுவார்கள். பின்னர் நம்முடைய வங்கிக் கணக்கிலோ அல்லது இன்னபிற சேவைகளிலோ, சிறிய பிரச்சினை இருப்பதாகக் கூறி குறிப்பிட்ட எண்ணை அழைத்தால் சரியாகிவிடும் எனக் கூறுவார்கள். நாமும் அவர்களை கூறுவதை நம்பி, அவர்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு அழைத்தால் போதும். நம்முடைய மொபைல் எண்ணுக்கு வரும் அழைப்புகள் மோசடி நபர்களின் எண்ணிற்கு ஃபார்வர்டு ஆகத் தொடங்கிவிடும். அதாவது உங்கள் எண்ணுக்கு யார் அழைத்தாலும், அது உங்களுக்கு வராது, மோசடி நபருக்குத் தான் செல்லும். இதனைப் பயன்படுத்தி வாய்ஸ் OTP-க்களை வைத்து அவர்களால் நம்முடைய பணத்தை திருடவும் வாய்ப்பிருக்கிறது.
தற்காத்துக் கொள்வது எப்படி?
இந்த வகையான மோசடி மட்டுமின்றி எந்த வகையான மோசடியாக இருந்தாலும் சில அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினாலே போதும், இவற்றில் சிக்காமல் நம்மையும் நம்முடைய தகவல்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம். தெரியாத எண்களில் இருந்து அழைத்து ஏதாவது செய்யச் சொன்னாலோ அல்லது குறிப்பிட்ட தகவல்களைக் கேட்டாலோ, எதையும் செய்யக்கூடாது, தகவல்களைக் கொடுக்கக் கூடாது. நம்முடைய மொபைல் போனுக்கு, பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒருவேளை நம்முடைய மொபைல் தொலைந்தாலும், மோசடி நபர்களால் அதிலிருக்கும் தகவல்களைக் கைப்பற்ற முடியாது. முக்கியமாக OTP-க்களை யார் கேட்டாலும் அளிக்கக்கூடாது. ஏனெனில் எந்தவொரு நிறுவனமும், நபரும், நம்முடைய OTP-யைக் கேட்க மாட்டார்கள்.