இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு?
செய்தி முன்னோட்டம்
இன்று மாலை நிலவில் தென் துருவப் பகுதியில் தரையிறங்கவிருக்கிறது சந்திரயான் 3. இந்தத் திட்டத்திற்கும், இதற்கு முன்னர் இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கும் எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா?
முதன் முதலில் இஸ்ரோ செயல்படுத்திய நிலவுத் திட்டமான சந்திரயான் 1 ஆனது வெறும் ரூ.380 கோடி செலவில் செயல்படுத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அதற்கு முந்தைய விண்வெளித் திட்டங்களுக்குப் பயன்படுத்திய அதே PSLV-XL ராக்கெட்டையே கூடுதல் பூஸ்டர்களுடன் மட்டும் பயன்படுத்தியிருந்திருக்கிறது இஸ்ரோ.
இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட சந்திரயான் 2 திட்டத்திற்கு, ரூ.978 கோடியை செலவழித்திருக்கிறது இஸ்ரோ. இத்திட்டத்தில் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய மூன்று கருவிகளும் இடம்பெற்றிருந்தன.
சந்திரயான்
சந்திரயான் 3யின் பட்ஜெட்:
மேலும், இஸ்ரோவின் இரண்டாவது நிலவுத் திட்டமான, சந்திரயான் 2 திட்டத்திற்கு மேம்படுத்தப்பட்ட GSLV-MK III, M1 ராக்கெட்டைப் பயன்படுத்தியிருக்கிறது இஸ்ரோ.
இத்திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நல்ல நிலையில் தற்போது நிலவை வலம் வந்து கொண்டிருக்கிறது. லேண்டர் மட்டுமே நிலவில் மோதி திட்டம் தோல்வியடைந்தது.
இரண்டாவது திட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது இஸ்ரோ மேற்கொண்டிருக்கும் சந்திரயான் 3 திட்டமானது ரூ.615 கோடியில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு LVM3 M4 ராக்கெட்டைப் பயன்படுத்தியிருக்கிறது இஸ்ரோ.
சந்திரயான் 2 திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்பிட்டரையே, இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளுக்கும் இஸ்ரோ தற்போது பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.