ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி?
கடந்தாண்டு தங்களுடைய 14 சீரிஸ் ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள். இந்த ஐபோன் சீரிஸூடனே, தங்களுடைய புதிய செயற்கைக்கோள் வழி அவசரக் குறுஞ்செய்தி (Emergency SOS via Satellite) வசதியை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத இடங்களிலும், ஆப்பிளின் இந்த வசதியின் மூலம் அவசர மற்றும் அபாயக் குறுஞ்செய்திகளை ஐபோன் பயனர்களால் அனுப்ப முடியும். இது மட்டுமல்லால், ஐபோன் பயனர்களின் இருப்பிடத்தையும் இந்த வசதியின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த வசதியை வழங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல்ஸ்டார் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்திருந்தது ஆப்பிள். செயற்கைக்கோள் கட்டமைப்பை குளோபல்ஸ்டார் உருவாக்கவதற்கான பல்வேறு உதவிகளை அந்நிறுவனத்திற்குச் செய்திருக்கிறது ஆப்பிள்.
ஸ்பேஸ்எக்ஸூடன் கைகோர்க்கும் குளோபல்ஸ்டார்:
இந்நிலையில், ஆப்பிளுடன் கைகோர்த்திருக்கும் குளோபல்ஸ்டார் நிறுவனம், தங்களுடைய புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கவிருக்கிறது. இதற்காக 64 மில்லியன் டாலர்களை ஸ்பேஸ்எக்ஸுக்கு வழங்குகிறது குளோபல்ஸ்டார். இந்தப் புதிய செயற்கைக்கோள்களானது ஆப்பிளின் செயற்கைக்கோள் வழி அவசரக் குறுஞ்செய்தி வசதியை மேம்படுத்தவும் உதவி புரியவிருக்கிறது. தற்போது அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, ஆஸ்ட்ரியா, பெல்ஜியம், இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஐபோன் 14 சீரிஸ் மூலம் செயற்கைகோள் வழி அவசர குறுஞ்செய்தி வசதியை வழங்கி வருகிறது ஆப்பிள். குளோபல்ஸ்டாரின் புதிய செயற்கைகோள் மூலம் இந்த மேலும் பல நாடுகளில் இந்த வசதியை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.