CoWIN தளத்தில் தகவல் கசிவு ஏற்பட்டது எப்படி?
CoWIN தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மக்களின் தகவல்களை ஒரு டெலிகிராம் பாட் மூலம் அணுக முடிகிறது என திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சாகேத் கோகலே பதிவிட்ட ட்வீட் ஒன்று இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், CoWIN செயலியானது முற்றிலும் பாதுகாப்பானது, அதனை மீறி அத்தளத்தில் உள்ள தகவலை யாரும் அவ்வளவு எளிதில் திருடிவிட முடியாது எனத் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. மேலும், இந்தத் தகவல் கசிவில் ஈடுபட்டிருக்கும் 'டெலிகிராம் பாட்'டானது நேரடியாக CoWIN தளத்துடன் தொடர்பு கொள்ளவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் தெரிவித்திருக்கிறது. பிறகு எப்படி இந்தத் தகவல் கசிவு ஏற்பட்டது?
தகவல் கசிவு ஏற்பட்டது எப்படி?
ஒரே விதமான தகவல்கள் மற்றும் சேவைகளை வழங்கும் செயலிகள் மற்றும் தளங்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள API என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். உதாரணத்திற்கு நமது மொபைலில் உள்ள வானிலையை அறியப் பயன்படுத்தும் செயலியானது, இந்தியாவின் வானியல் ஆராய்ச்சி மையத்தின் சேவையுடன் தொடர்பு கொண்டு, அதிலிருந்து தகவல்களைப் பெற்று நமக்குக் கொடுக்கும். இந்த தகவல் பகிர்விற்கு API பயன்படுத்தப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறையில், ANM (Auxilary Nurses and Midwifes) தகவல்களை சேகரித்து வைக்கும் மற்றொரு சேவையின் மூலமாகவே CoWIN தளத்தில் உள்ள தகவல்களை API மூலம் பெற்று, அதனை டெலிகிராம் பாட் மூலம் அளித்திருக்கின்றனர். இதனை தகவல் கசிவு எனக் கூற முடியாது, தகவல் திருட்டு என்று தான் கூற வேண்டும்.