Loading...
10 ஆண்டுகளில் இல்லாத அதிர்ச்சி மாற்றம்! இமயமலை உருகும் வேகம் 65% அதிகரிப்பு; இந்தியாவின் 20% ஜிடிபிக்கு ஆபத்து?
இமயமலை உருகும் வேகம் 65% அதிகரிப்பு

10 ஆண்டுகளில் இல்லாத அதிர்ச்சி மாற்றம்! இமயமலை உருகும் வேகம் 65% அதிகரிப்பு; இந்தியாவின் 20% ஜிடிபிக்கு ஆபத்து?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2026
06:07 pm

செய்தி முன்னோட்டம்

இமயமலை பிராந்தியத்தில் பனிப்பாறைகள் கரையும் வேகம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளதாக சிஸ்டமிக், ஐசிஐஎம்ஓடி மற்றும் கோவிந்த பல்லவ் பந்த் இமயமலை சுற்றுச்சூழல் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடத் தற்போது இமயமலை பனிப்பாறைகள் 65% வேகத்தில் தங்களது அடர்த்தியை இழந்து வருகின்றன. நேபாளம் மற்றும் திபெத் பிராந்தியங்களில் 1,300க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

நிலவும் பேராபத்து

40,000 பனிப்பாறைகளில் 21 மட்டுமே கண்காணிப்பு

இமயமலை-காரகோரம் பிராந்தியத்தில் தோராயமாக 40,000 பனிப்பாறைகள் உள்ள நிலையில், அதில் வெறும் 21 பனிப்பாறைகள் மட்டுமே நேரடியாகவும் விரிவாகவும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பனிப்பாறைகள் வேகமாக உருகிப் பின்வாங்குவதால், பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளால் ஆன பலவீனமான கரைகளைக் கொண்ட ஆபத்தான பனிப்பாறை ஏரிகள் உருவாகி வருகின்றன.

இந்தியாவில் உள்ள 189 அதிக ஆபத்துள்ள பனிப்பாறை ஏரிகளில், 56 ஏரிகள் மிக அதிக ஆபத்துடையவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவின் 20% ஜிடிபிக்கு ஆபத்து

இந்தியாவின் நிலப்பரப்பில் இமயமலை 18% மட்டுமே இருப்பினும், நாட்டில் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் 35% இங்குதான் நிகழ்கின்றன.

இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் நதிநீர் இந்தியாவின் கோதுமை, நெல், தேயிலை விவசாயம், நீர்மின் உற்பத்தி மற்றும் ஆன்மீகச் சுற்றுலா மூலம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் 20% பங்களிப்பை வழங்குகிறது.

பனிப்பாறைகள் அழிந்து வரும் இதே நிலை தொடர்ந்தால், நூற்றாண்டின் நடுப்பகுதியில் நதிகளின் நீரோட்டம் உச்சத்தை அடைந்து பின்னர் வற்றிப்போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கருப்பு கார்பன்

செங்கல் சூளைகளின் கருப்பு கார்பன் மற்றும் உருகும் பனி

இமயமலை பனிப்பாறைகள் உருகுவதற்கு புவி வெப்பமயமாதல் மட்டுமே காரணமல்ல.

சமவெளிப் பகுதியில் இயங்கும் செங்கல் சூளைகளில் இருந்து வெளியாகும் கருப்பு கார்பன் (Black Carbon / Soot) மாசும் மிக முக்கியக் காரணமாகும்.

இமயமலை பனி உருகுவதில் சுமார் மூன்றில் ஒரு பங்கு (1/3) ஆபத்திற்கு இந்த கருப்பு கார்பனே காரணம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பனிப்படலத்தின் மீது படியும் இந்த சூட்/கரிமத்தூள் சூரிய ஒளியை அதிகளவில் ஈர்த்துப் பனியை அதிவேகமாக உருக்குகிறது.

ADVERTISEMENT

தீர்வுகள்

எல்லை தாண்டிய கூட்டமைப்பும் அவசரத் தீர்வுகளும்

இமயமலை பிராந்தியத்தின் அழிவைத் தடுக்கப் பகுதி அளவிலான மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துதல், பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடற்ற சுற்றுலாவை மாற்றி அமைத்தல் போன்ற 10 முக்கிய மாற்றங்களை ஆய்வு முன்வைக்கிறது.

"இமயமலை என்பது உலகின் மூன்றாவது துருவம். ஆர்டிக் அல்லது அண்டார்டிகா போலன்றி, இத்துருவத்தின் அடியில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்." என்று பொருளாதார நிபுணர் லார்ட் நிக்கோலஸ் ஸ்டெர்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லைகளைத் தாண்டி தெற்காசிய நாடுகள் அனைத்தும் இணைந்து செயலாற்றினால் மட்டுமே லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முடியும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ADVERTISEMENT