
இனி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது 'DigiLocker' கணக்கு வைத்திருப்பதும் அவசியம்
செய்தி முன்னோட்டம்
இனி இந்தியாவில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசின் டிஜிலாக்கர் (Digilocker) செயிலியிலும் கணக்கைத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதைக் காட்டயமாக்கியிருக்கிறது மத்திய அரசு. சர்வதேச பயணங்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்ப விதிமுறையில் இது முக்கியமான மாற்றமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
டிஜிலாக்கர் என்பது, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் செயலியாகும்.
இந்தச் செயலியில் ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட மத்திய அரசு ஆவணங்கள் முதல், கல்வி சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம் வரை அனைத்து விதமான ஆவணங்களையும் அரசுத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள முடியும்.
தேவைப்படும் போது, இந்த செயலியில் இருந்தே நேரடியாக நம்முடைய ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் வகையில், இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு எதற்கு டிஜிலாக்கர் செயலி:
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, குறிப்பிட்ட அரசு ஆவணங்களை நாம் வழங்க வேண்டியிருக்கும். இனி அப்படி வழங்க வேண்டியிருக்கும் ஆவணங்களை டிஜிலாக்கர் செயலியில் தரவிறக்கம் செய்து, பின்னர் அதன் மூலம் இணையவழி பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டிருப்பதுடன், டிஜிலாக்கர் வழி ஆவணங்களை அளிப்பவர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் எந்த நடைமுறையின் போது கையில் தங்களுடைய ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை எனத் தெரிவித்திருக்கிறது வெளியுறவுத் துறை அமைச்சகம்.
இந்தப் புதிய நடைமுறையின் மூலம், ஒட்டுமொத்த பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையும் துரிதமாவதுடன், மிகவும் எளிமையான செயல்முறையாகவும் மாற்றப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.