Page Loader
போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்
போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்

போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 01, 2023
02:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளிலும், போலியான ஆண்ட்ராய்டு செயலியைக் கொண்டு குறிப்பிட்ட பயனர்களை மட்டும் குறிவைத்து ஹேக்கர்கள் தகவல் திருட்டில் ஈடுபட்டு வருவதைக் கண்டறிந்திருக்கிறது சிங்கப்பூரைச் சேர்ந்த சைஃபிர்மா என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம். 'SafeChat' என்ற பெயரில், சாட்டிங் சேவையை வழங்கும் செயலியாக காட்டிக் கொள்ளும் இந்த செயலியின் பின்னணியில் APT பகாமுத் மால்வேர் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறது சைஃபிர்மா சைபர் பாதுகாப்பு நிறுவனம். பாதிக்கப்பட்டவர்களின் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தவுடன், அது போலியான செயலி எனப் பயனர்கள் சுதாரிக்கும் முன்னரே, அதிலிருக்கும் தகவல்களை திருடி வேறு சர்வர்களுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது இந்த ஸ்பைவேர்.

சைபர் பாதுகாப்பு

தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்: 

இதற்கு முன்னரும் இந்த ஸ்பைவேரானது குறிப்பிட்ட குழுக்களுக்கு எதிரான தகவல்களைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சைஃபிர்மா நிறுவனம். தற்போது இந்தியா உட்பட பல்வேறு தெற்காசிய நாடுகளிலும் இதனைப் பயன்படுத்தி தகவல்களை ஒரு கும்பல் திருடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதற்கு முன்னர் இந்த ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தற்போது இந்த ஸ்பைவேரால் குறிவைக்கப்படுபவர்களை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் இருக்கும் ஏதோவொரு குழு தான், இந்த ஸ்பைவேரைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது சைஃபிர்மா சைபர் பாதுகாப்பு நிறுவனம். சமூக வலைத்தள தகவல்கள் தொடங்கி, அனைத்து வகையான தகவல்களையும் இந்த ஸ்பைவேர் கைப்பற்றுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.