கல்லூரி மாணவர்களுக்கு கோடிங் பயிற்சி அளிக்க புதிய முன்னெடுப்புக்காக தமிழக அரசுடன் கைகோர்த்த குவி
இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கற்றல் சேவை வழங்கி வரும் குவி (Guvi) நிறுவனமானது தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் ஒன்றை நடத்துகிறது. தமிழக அரசின், 'நான் முதல்வர்' திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத்துடனும் இணைந்து இந்தத் ஹேக்கத்தானுடன் கற்றலையும் ஊக்குவிக்கவிருக்கிறது குவி. 'நான் முதல்வன்-தமிழ்நாடு கோடர்ஸ் ப்ரீமியம் லீக்' (NM-TNcpl) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், முதலில் மாணவர்களுக்கு கோடிங் குறித்த கற்றலை அளித்து, பின்னர் அவர்களுக்கு வழிகாட்டியாக ஒருரை நியமித்து, அதனைத் தொடர்ந்தே ஹேக்கத்தானை நடத்தவிருக்கிறது குவி.
யார் கலந்து கொள்ளலாம்? எப்படி பதிவு செய்வது?
கல்லூரி மாணவர்கள் யார் வேண்டுமானாதும் குவியின் இந்த ஹேக்கத்தானில் கலந்து கொள்ளலாம். இந்த ஹேக்கத்தானில் கலந்து கொள்பவர்களுக்கு கோடிங் திறனை வளர்க்கும் விதமாக இலவச ப்ரீமியம் பாடத்திட்டங்கள் வழங்கப்படவிருக்கின்றன. சிறப்பாக கோடிங் செய்வர்கள் ஹேக்கத்தானில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகளும் இதில் கிடைக்கிறது. இந்த முன்னெடுப்பினை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். கோடிங்கைப் பற்றி தெரியாத மாணவர்களும் கூட இந்தத் திட்டத்தில் கலந்து கொண்டு கோடிங் பயிற்சிகளைப் பெற முடியும். இத்திட்டத்தில் கலந்து கொள்ள, கல்லூரியின் அடையாள அட்டை எண்ணுடன் இங்கே கிளிக் செய்து குவியின் வலைப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களையும் அந்த வலைத்தளப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.