ஆப்பிள் சேவைகளில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் கோளாறுகள்
ஆப்பிள் சாதனங்கள் மற்றும் சேவைகளில் பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான கோளாறுகள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலை பதில் குழு (CERT-In) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய பயனாளர்களின் பாதுகாப்பான மின்னணு சாதன மற்றும் இணையப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் CERT-In அமைப்பு அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம் தான். முன்னதாக சாம்சங் கேலக்ஸி பயனாளர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு அந்த அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ஆப்பிள் பயனாளர்களுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆப்பிள் சாதனங்கள் மற்றும் சேவைகளில் கோளாறு?
ஆப்பிள் சாதனங்கள் மற்றும் சேவைகளில் உள்ள சில பாதுகாப்புக் கோளாறுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்களால் பயனாளர்களின் ஆப்பிள் சாதனங்களில் உள்ள தகவல்களைத் திருடவும், பிற சட்டத்திற்குப் புறம்பான செயல்களை மேற்கொள்ளவும் முடியும் என CERT-In வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஓஎஸ், ஐபேடு ஓஎஸ், மேக் ஓஸ், டிவி ஓஸ், வாட்ச் ஓஎஸ் மற்றும் சஃபாரி பிரவுசர் உள்ளிட்ட ஆப்பிள் சாதன இயங்குதளங்கள் மற்றும் சேவைகளில் பாதுகாப்புக் கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்புக் கோளாறுகள் குறித்த ஆப்பிள் தரப்பிலிருந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.