சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை
இந்தியாவில் சிம் கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்கும் விதமாக மொபைல் பயனாளர்களுக்கு பிரத்தியேக வாடிக்கையாளர் ஐடிக்களை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது தொலைத்தொடர்புத் துறை. ஒரு மொபைல் பயனாளருக்கு வழங்கப்படும் வடிக்கையாளர் ஐடியானது அவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். மேலும், அவர் வாங்கும் சிம் கார்டுகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அந்த வாடிக்கையாளர் ஐடியிலேயே சேமிக்கப்படும். ஒரு சிம் கார்டை யாருக்காக வாங்குகிறார்கள், எத்தனை சிம் கார்டுகளை அவர் வாங்கியிருக்கிறார் என்பது குறித்த பல்வேறு தகவல்களையும் வாடிக்கையாளர் ஐடியைக் கொண்ட தேவைப்படும் நேரத்தில் அதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும்.
64 லட்சம் சிம் இணைப்புகள் துண்டிப்பு:
கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் மோசடி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட 64 லட்சம் மொபைல் இணைப்புகளை துண்டித்திருக்கிறது தொலைதொடர்புத் துறை. இந்தியாவில் ஒரு நபர் அதிகபட்சமாக ஒன்பது சிம் கார்டுகளை மட்டுமே வாங்க முடியும். ஆனால், ஒன்பது சிம் கார்டுகளுக்கு மேலாக வாங்கும் நபர்களைக் கண்டறியவோ, தடுக்கவோ அரசிடம் தற்போது எந்த வழிமுறைகளும் இல்லை. முக அடையாளம் கண்டறியும் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடனேயே கூடுதலான சிம் கார்டுகளைக் கொண்டிருப்பவர்களைக் கண்டறிய முடிகிறது. மொத்தத்தில் இந்தியாவில் வாங்கப்படும் ஒவ்வொரு சிம் கார்டையும் யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆவணப்படுத்தவே இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது தொலைதொடர்புத் துறை டிசம்பர் 1ம் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.