LOADING...
இந்தியாவில் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை குறைக்க மத்திய அரசு திட்டம்
டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை குறைக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை குறைக்க மத்திய அரசு திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 17, 2025
04:58 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) விதிகளை செயல்படுத்துவதற்கான 18 மாத காலக்கெடுவை, குறிப்பாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அரசாங்கம் விரைவுபடுத்த ஆலோசித்து வருகிறது. இந்தப் புதிய விதிகள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், அவற்றின் முழுமையான அமலாக்கத்திற்கு நிறுவனங்களுக்கு 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் GDPR போன்ற கடுமையான தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்கெனவே பின்பற்றும் பெரிய நிறுவனங்களுக்கு, இந்த காலக்கெடுவை குறைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இந்த விஷயத்தில் தொழில்துறை பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தினார்.

அவசியம்

விரைவுபடுத்த வேண்டிய அவசியம்

பெரிய நிறுவனங்கள் ஏற்கெனவே உலகளவில் கடுமையான தரவுப் பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், அதே அமைப்பை இந்தியாவிலும் ஏன் பயன்படுத்தக்கூடாது என்று அரசாங்கம் வாதிடுகிறது. இது குறித்து அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், "உங்கள் இணக்கக் கட்டமைப்பு பிற நாடுகளில் ஏற்கனவே உள்ளது. அதை ஏன் இங்கே பிரதிபலிக்க முடியாது?" என்று கேள்வி எழுப்பினார். இந்த ஆலோசனைகளுக்கு தொழில்துறை சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தரவுப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்ட பின், விதிகளை மேலும் திருத்தி, இணக்கத்திற்கான காலக்கெடுவை குறைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமலாக்கம் 

கட்டமிட்ட அமலாக்கம்

புதிய DPDP விதிகள் கட்டம் கட்டமாக அமலுக்கு வருகின்றன. தரவுப் பாதுகாப்பு வாரியம் குறித்த விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் நிலையில், சம்மத மேலாளர் (consent manager) கட்டமைப்பு 12 மாதங்களிலும், முழுமையான இணக்கக் கடமைகள் (பயனர் சம்மத அறிவிப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள்) 18 மாதங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளன. தரவுப் பாதுகாப்பு விதிகள், குடிமக்களின் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் வைஷ்ணவ் வலியுறுத்தினார். இந்த விதிகள் எளிமையான மொழியில், செயல்படுத்தலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.