சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு
இந்தியாவில் உள்ள இணையப்பயனர்களை தகவல் திருட்டு மற்றும் இதர தொழில்நுட்ப பிரச்சினைகளில் இருந்து காக்க அவ்வப்போது இந்தியாவின் கணினி அவசர பதில் குழுவானது (CERT-In) எச்சரிக்கை விடுக்கும். முக்கியமாக ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள சாஃப்ட்வேர் கோளாறுகள் மற்றும் செயலிகளில் உள்ள பாதுகாப்புக் கோளாறுகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை அவ்வப்போது CERT-In அமைப்பு வெளியிடும். இது மத்திய மின்னணு மற்றும் தகலல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் அமைப்பாகும். தற்போது இந்த தொழில்நுட் பாதுகாப்பு அமைப்பானது, சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் உள்ள சில பாதுகாப்பு கோளாறுகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் இது குறித்து விரைவாக செயல்படவும் கேட்டுக் கொண்டிருக்கிறது அந்த அமைப்பு.
சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் உள்ள பாதுகாப்புக் கோளாறு:
சாம்சங் மொபைல் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 11, 12, 13 மற்றும் 14 ஆகியவற்றில் பல்வேறு கோளாறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது CERT-In அமைப்பு. இந்த பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி ஹேக்கர்களால், பயனாளர்களின் ஸ்மார்ட்போன்களில் உள்ள பின் நம்பர், வங்கிக் கணக்கு தகவல்கள் மற்றும் கோப்புகள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களையும் திருட முடியும். இந்த கோளாறுகளை சரிசெய்வதற்கான செக்யூரிட்டி பேட்ச்களையும் சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் CERT-In அமைப்பு, பயனாளர்கள் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டுகோள் விடுத்திருக்கிறது. மேலும், அனைத்து ஸ்மார்ட்போன் பயனாளர்களும் அவ்வப்போது தங்களுடைய ஸ்மார்ட்போன் இயங்குதங்களை அப்டேட் செய்வதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தியிருக்கிறது CERT-In அமைப்பு.