ஜிமெயில் மற்றும் போட்டோஸ் தகவல்களிலிருந்து விளம்பரங்களா? கூகுள் தனியுரிமைக் கொள்கை மாற்றம்; தடுப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
கூகுள் நிறுவனம் தனது தனியுரிமைக் கொள்கையில் அமைதியாகச் செய்துள்ள ஒரு முக்கிய மாற்றம் உலகளாவிய பயனர் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிமெயில், கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் போட்டோஸ் ஆகியவற்றில் உள்ள தகவல்களைத் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களுக்குப் பயன்படுத்த மாட்டோம் என்ற முந்தைய உறுதியில், 2026 அக்டோபர் 16 முதல் கூகுள் ஒரு புதிய விதிவிலக்கை இணைத்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தரவுகளை ஏஐ சேவைகளுக்கு அனுமதிக்கும் பட்சத்தில், அவை விளம்பரங்களுக்கும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
கூகுள் ஏஐ
பர்சனல் இன்டலிஜென்ஸ் மற்றும் கூகுள் ஏஐ செயல்படும் முறை
பயனர்கள் தங்களின் கூகுள் தேடல் அல்லது ஜெமினி ஏஐ செயலிகளில் பர்சனல் இன்டலிஜென்ஸ் அம்சத்தை இயக்கும் போது, இந்தத் தரவுப் பகிர்வு சாத்தியமாகிறது.
எடுத்துக்காட்டாக, உங்கள் ஜிமெயிலில் உள்ள பயணப் பதிவுகள் அல்லது கூகுள் போட்டோஸில் உள்ள படங்களின் அடிப்படையில் கூகுள் உங்களின் ஆர்வங்களைக் கணித்து, அதற்கு ஏற்ற விளம்பரங்களையும் பரிந்துரைகளையும் தேடல் முடிவுகளில் காட்சிப்படுத்த முடியும்.
இருப்பினும், உங்கள் மின்னஞ்சல்களையோ அல்லது புகைப்படங்களையோ விளம்பரதாரர்கள் நேரடியாகப் பார்க்க முடியாது என்பதை நிறுவனத்தின் கொள்கை தெளிவுபடுத்துகிறது.
தகவல் பாதுகாப்பு
தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு மற்றும் பயனர் அச்சங்கள்
ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் போன்ற தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய தளங்களின் தரவுகள் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, பயனர்கள் தங்களின் தரவுப் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த அம்சம் இயல்பாகவே அனைவருக்குமான கட்டாய விதியாக மாற்றப்படவில்லை என்றும், பயனர்கள் தாங்களாகவே அனுமதி அளித்த பிறகே இது செயல்படும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் பயனர்கள் விரும்பும் பட்சத்தில் எந்த நேரத்திலும் இந்த அனுமதிகளைத் திரும்பப் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைப்புகள்
கூகுள் ஏஐ விளம்பரங்களை முடக்குவது மற்றும் அமைப்புகளை மாற்றுவது எப்படி?
உங்கள் ஜிமெயில் மற்றும் போட்டோஸ் தரவுகள் விளம்பரத் தனிப்பயனாக்கத்திற்குப் பயன்படுவதைத் தடுக்க விரும்பினால், கூகுளின் அமைப்புகளில் எளிதாக மாற்றங்களை செய்யலாம்.
கூகுள் கணக்கின் 'Data & privacy' பகுதிக்குச் சென்று 'Search Services Personalisation' அமைப்பைத் திறப்பதன் மூலம் இணைக்கப்பட்ட செயலிகளைத் துண்டிக்க முடியும்.
அல்லது 'Personalised Recommendations' அமைப்பை முழுமையாக முடக்குவதன் மூலமும், 'My Ad Center' பக்கத்தில் 'Personalised Ads' தேர்வை ஆஃப் செய்வதன் மூலமும் உங்கள் தரவைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.