ஜெமினி வெர்ஷன் 2.0ஐ 2024 டிசம்பரில் அறிமுகப்படுத்துகிறது கூகுள்
கூகுள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான ஜெமினியின் வெர்ஷன் 2.0ஐ டிசம்பரில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஓபன்ஏஐ தனது முதன்மை ஏஐ மாடலை அதே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த செய்தி வந்துள்ளது. கூகுள் டீப் மைண்ட் தலைமை நிர்வாக அதிகாரி டெமிஸ் ஹசாபிஸிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்தாலும், ஜெமினியின் புதிய வெர்ஷன் குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாடுகளை வழங்காது என்று தி வெர்ஜ் தெரிவித்துள்ளது. கூகுளின் ஏஐ வளர்ச்சிப் பயணமானது தற்போது ஜெமினி எனப்படும் பார்ட் ஏஐ வழியாக ஜெமினி 1.0 மற்றும் ஜெமினி 1.0 ப்ரோ மொழி மாடல்களை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து கடந்த பிப்ரவரியில், நிறுவனம் ஜெமினி 1.5ஐ அறிமுகப்படுத்தியது.
ஐ/ஓ 2024 நிகழ்வில் வெளியிட்ட அப்டேட்
பின்னர் ஐ/ஓ 2024 நிகழ்வில், கூகுள் அதன் மல்டிமாடல் ஏஐ உதவியாளர் ப்ராஜெக்ட் அஸ்ட்ராவைக் காட்சிப்படுத்தியது. இது உரை, ஆடியோ அல்லது வீடியோ உள்ளீடுகள் மூலம் பயனர் கேள்விகளுக்கு நிகழ் நேரத்தில் பதிலளிக்க முடியும். இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் பல தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய ஏஐ மாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ்ஏஐ, ஆந்த்ரோபிக் மற்றும் மெட்டா போன்றவையும் தங்கள் சமீபத்திய மாடல்களை எதிர்காலத்தில் மேபடுத்தி வெளியிட தயாராகி வருகின்றன. தெளிவாக, இது ஏஐ வளர்ச்சி உலகில், ஒவ்வொருவரும் தங்கள் ஆடம்பரமான புதிய மாடல்களுடன் மற்றவரை விஞ்ச முயற்சி செய்கிறார்கள்.