பார்டு சாட்பாட்டில் 'நினைவு கொள்ளும்' புதிய வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் கூகுள்
கடந்தாண்டு வெளியான உருவாக்க செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டிற்குப் போட்டியாக, தங்களுடைய பார்டு AI சாட்பாட்டை கடந்த மே மாதம் உலகமெங்கும் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தியது கூகுள். தற்போதும் பரிசோதனை முயற்சியாகவே இருந்து வரும் பார்டு AI சாட்பாட்டை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது கூகுள். ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு இந்திய மொழிகளிலும் பார்டு சாட்பாட்டை நாம் பயன்படுத்த முடியும். இந்நிலையில், பார்டு சாட்பாட்டில் புதிய 'நினைவு' வசதி ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது கூகுள். தற்போது சோதனையில் இருக்கும் இந்த வசதியானது, பார்டுடனான பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேலும் சிறப்பாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
பார்டின் 'நினைவு' வசதி, என்ன அது?
நம்முடைய கேள்விகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற தகவல்களை சுயமாக உருவாக்கிக் கொடுப்பது தான் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களின் சிறப்பு. இந்நிலையில், நாம் ஒரு முறை கூறியதை நினைவில் நிறுத்தி பிற கேள்விகளின் போதும், அந்த நினைவைப் பயன்படுத்தி பதிலளிக்கும் வகையில் இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள். இந்த 'நினைவு' வசதியின் மூலம், நம்முடைய கருத்துக்களை, விருப்பங்களை மற்றும் நம்முடைய தகவல்களை பார்டு சேமித்துக் கொண்டு, நமக்கு பதிலளிக்கும் போது அதனையும் கருத்தில் கொள்ளும். ஒரு குறிப்பிட்ட தகவலை பார்டு நினைவில் சேமிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை பயனர்களாகிய நாம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பது இதனை ஒரு பாதுகாப்பான வசதியாக மாற்றுகிறது.