செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம் - கூகுள் முடிவால் குமுறும் ஊழியர்கள்!
கூகுள் நிறுவனம் செலவை குறைக்கும் வகையில் ஊழியர்களுக்கான பல சலுகைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும் கூகுள், தனது ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்து வந்தது. அண்மையில் ஆட்குறைப்பை செய்த கூகுள் அடுத்ததாக ஊழியர்களின் சலுகைகளில் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஊழியர்களுக்கு வழங்கி வந்த நொறுக்குத் தீனிகள், தின்பண்டங்கள் மற்றும் சலவை சேவைகள், மசாஜ், மதிய உணவு ஆகியவற்றை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும், மடிக்கணிணிகளுக்கான தனிப்பட்ட செலவுகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாகவுத் ஊழியர்களுக்கு கூகுள் மெயில் அனுப்பியுள்ளது. இதற்கு கூகுள், நிதியை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதே தங்களின் இலக்கு என தெரிவித்துள்ளது. இதனால் நிறுவன ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பணிநீக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாற்றங்கள்
கடந்த மாதம், கூகுள் தனது ஊழியர்களுக்கு மிகக் குறைவானவர்கள் மூத்த நிலைகளுக்கு பதவி உயர்வு பெறுவார்கள் என்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்தது. மகப்பேறு அல்லது மருத்துவ விடுப்பில் இருக்கும் போது பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியர்களுக்கு, ஐஏஎன்எஸ் படி, மீதமுள்ள கால அவகாசத்திற்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்பதையும் அது குறிப்பிட்டுள்ளது "இந்த மாற்றம் எளிதானது அல்ல என்றாலும், ஊழியர்களின் அடுத்த வாய்ப்பைத் தேடும் போது அவர்களுக்கு ஆதரவளிக்கப் போகிறோம்" என்று நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.