'ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களில் இனி NFTக்கு அனுமதி': கூகுள் பிளே
கூகுள் பிளேயில் வழங்கப்படும் Web3 உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை கூகுள் நிறுவனம் பல நாட்களாக ஆராய்ந்து வந்த நிலையில், ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களில் NFT டோக்கன்களை வழங்க அனுமதிப்பதற்கு கூகுள் பிளே அதன் கொள்கையை புதுப்பித்துள்ளது. கூகுள் பிளே குழுவின் தயாரிப்பு மேலாளர் ஜோசப் மில்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சரி, இந்த புதிய கொள்கை பிளாக்செயின் அடிப்படையிலான ஆப்ஸ்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை இப்போது பார்ப்போம். பிளாக்செயின் ஆப்ஸ்களுக்கு எதிரான கூகுளின் அணுகுமுறை பலமுறை விமர்சிக்கப்பட்டிருக்கிறது. க்ரிப்டோ உள்ளடக்கங்களை தடுப்பதற்கு பல கட்டுப்பாடுகளை கூகுள் நிறுவனம் விதித்திருந்தது. ஆனால், அது போன்ற Web3 உள்ளடக்கங்களுக்கு எதிரான கொள்கையை தற்போது கூகுள் மாற்றியுள்ளது.
சில கட்டுப்பாடுகளையும் கூகுள் பிளே விதித்துள்ளது
Web3 ஸ்டார்ட்அப்களை ஆதரிக்கும் முடிவுகளையும் கூகுள் சமீபகாலமாக எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் பிளேயின் இந்த புதிய கொள்கையானது, ஆப்ஸ் மற்றும் கேம்களில் பிளாக்செயின் அடிப்படையிலான உள்ளடக்கம் பரிவர்த்தனை செய்யப்படுவதை எளிதாக்கும். இனி, கூகுள் பிளேயில் ஆப்ஸ் டெவலப்பர்கள் NFT ரிவார்டுகளை பயனர்களுக்கு வழங்கலாம். இதன் மூலம், நிறைய ஆப்ஸ்களுக்கு பயனர்களின் வருகை அதிகரிக்கும். இந்த புதிய கொள்கையின் மூலம், ஆப்ஸ் அனுபவங்களை மேம்படுத்தி, டெவலப்பர்களின் பிசினஸ்களை விரிவாக்க கூகுள் பிளே உதவி இருக்கிறது. எனினும், NFTகளை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்திவிடக்கூடாது எனபதற்காக சில கட்டுப்பாடுகளையும் கூகுள் பிளே விதித்துள்ளது.