உங்க போன் பேட்டரி சீக்கிரம் தீருதா? வில்லன் ஆப்ஸ்களைக் காட்டிக்கொடுக்கும் கூகுள்; பிளே ஸ்டோரில் புதிய அதிரடி மாற்றம்
செய்தி முன்னோட்டம்
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சில செயலிகள் பின்னணியில் இயங்கி பேட்டரி சக்தியை அளவுக்கு அதிகமாக உறிஞ்சுவதைத் தடுக்க கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனிமேல் ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்யும் போதே, அது அதிக பேட்டரியைப் பயன்படுத்தும் தன்மை கொண்டது என்றால் பிளே ஸ்டோர் பக்கத்திலேயே எச்சரிக்கை லேபிள்கள் காட்டப்படும் என்று அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
வேக் லாக்
வேக் லாக் (Wake Lock) மெக்கானிசம் என்றால் என்ன?
ஆண்ட்ராய்டு போன்களில் ஸ்கிரீன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும், ஆடியோ கேட்பது அல்லது லொகேஷன் சேவைகளுக்காக சிபியு தொடர்ந்து இயங்க 'வேக் லாக்' என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சில செயலிகள் இதைப் தவறாகப் பயன்படுத்துகின்றன. பயனர் அந்த செயலியை மூடிய பிறகும், கடந்த 28 நாட்களில் 5 சதவீதத்திற்கும் மேலாக இந்த வேக் லாக் செயல்பாட்டில் இருந்தால், அந்த செயலி மோசமான நடத்தை கொண்டதாக வகைப்படுத்தப்படும்.
மாற்றம்
பிளே ஸ்டோரில் என்ன மாற்றம் தெரியும்?
புதிய விதிமுறைகளின்படி, அதிக பேட்டரியை உறிஞ்சும் செயலிகளின் பக்கத்தில், "இந்தச் செயலி உங்கள் எதிர்பார்ப்பை விட அதிக பேட்டரியைப் பயன்படுத்தக்கூடும்" என்ற எச்சரிக்கை செய்தி இடம்பெறும். மேலும், இத்தகைய செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரின் பரிந்துரைக்கப்படும் செயலிகள் பட்டியலிலிருந்தும் நீக்கப்படும். இதன் மூலம் பயனர்கள் அத்தகைய ஆப்ஸ்களுக்குப் பதிலாக சிறந்த மாற்று செயலிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.
நன்மைகள்
பயனர்களுக்குக் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகள்
இந்த புதிய அம்சம் பயனர்களுக்குப் பின்வரும் நன்மைகளைத் தரும்: நீண்ட பேட்டரி ஆயுள்: அதிக பேட்டரியைத் தின்னும் ஆப்ஸ்களைத் தவிர்ப்பதன் மூலம் போனின் பேட்டரி நீண்ட நேரம் உழைக்கும். ஆப்ஸ்களை அடையாளம் காணுதல்: சரியாக மேம்படுத்தப்படாத செயலிகளை லேபிள்கள் மூலம் எளிதில் கண்டறியலாம். இந்த எச்சரிக்கைத் திட்டம் டெவலப்பர்களைத் தங்கள் செயலிகளில் உள்ள பேட்டரி தொடர்பான குறைபாடுகளைச் சரிசெய்யத் தூண்டும்.