
கூகுளின் வியோ 3 ஏஐ வீடியோ அம்சத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக சுந்தர் பிச்சை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கூகுள் நிறுவனம் தனது மேம்பட்ட ஜெனரேட்டிவ் ஏஐ வீடியோ கருவியான வியோ 3ஐ (Veo 3) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறது. வழக்கமாக கட்டணச் சேவையாக இருக்கும் இந்தக் கருவி, இந்த வார இறுதிவரை கட்டணமின்றி பயன்படுத்தக் கிடைக்கும் என கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். பயனர்கள் தடையில்லா சேவையைப் பெறுவதற்காக, "ஏராளமான டிபியுக்களை" (a load of TPUs) பயன்படுத்தி கூகுள் உள்கட்டமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப வீடியோக்களை ஜெமினி செயலி வழியாக உருவாக்கலாம். இந்த இலவச சலுகை, திங்கள் கிழமை காலை 10 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
ஜெமினி ப்ரோ
ஜெமினி ப்ரோ பயனர்களுக்கு மட்டுமே
மேலே குறிப்பிட்டுள்ள நேரத்திற்குப் பிறகு, இந்தச் சேவை மீண்டும் ஜெமினி ப்ரோ பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது. வியோ 3 என்பது ஒரு ஜெனரேட்டிவ் ஏஐ வீடியோ கருவியாகும். இது பயனரின் உரை உள்ளீடுகளைப் பயன்படுத்தி, குறுகிய, யதார்த்தமான வீடியோக்களை உருவாக்கும் திறன் கொண்டது. அனிமேஷன், சினிமா காட்சிகள் மற்றும் ஸ்டோரிபோர்டுகள் போன்ற பல்வேறு வகையான வீடியோக்களை இதனால் உருவாக்க முடியும். இந்தியாவில் வியோ 3 ஃபாஸ்ட் (Veo 3 Fast) என்ற வேகமான மாதிரியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்களுக்கு வீடியோக்களை இன்னும் விரைவாக உருவாக்கும். கூகுளின் இந்த புதிய முயற்சி, ஓபன்ஏஐயின் சோரா மற்றும் பெர்பிளக்சிட்டிஏஐ போன்ற பிற தளங்களுக்கு ஒரு நேரடி போட்டியாக அமைகிறது.