ஜெமினி ஏஐயின் வெளியீட்டை ஜனவரி 2024-க்கு தள்ளி வைத்த கூகுள்
தற்போது செயற்கை நுண்ணறிவு சாட்பாட் மற்றும் கருவிகளில் நேரடிப் போட்டியில் இருப்பது கூகுளும், ஓபன்ஏஐ நிறுவனமும் தான். ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடிக்குப் போட்டியாக, பார்டு ஏஐ சாட்பாட்டை அறிமுகப்படுத்தியது கூகுள். ஆனால், சாட்ஜிபிடியின் முதல் வடிவமானது ஜிபிடி-3.5-ஐ அடிப்படையாகக் கொண்டது. சாட்ஜிபிடியைத் தொடர்ந்து, ஜிபிடி-4 மற்றும் ஜிபிடி-4 டர்போ என மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட் வெர்ஷன்களை வெளியிட்டுவிட்டது ஓபன்ஏஐ. அந்த ஜிபிடி-4 மாடலுக்கான கூகுளின் பதில் தான் ஜெமினி AI. இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற I/O நிகழ்வில் இந்த ஜெமினி AI மாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது கூகுள். அடுத்த வாரம் உலகமெங்கும் இந்த ஜெமினி மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருந்த நிலையில், தற்போது அதன் வெளியீடு 2024-க்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
ஜெமினி வெளியீட்டில் ஏன் தாமதம்?
ஆங்கிலம் அல்லாது பிற மொழிப் பயன்பாட்டில் சற்று நிலைத்தன்மை இல்லமல் ஜெமினி ஏஐ இருப்பதனால், அதன் வெளியீட்டை தற்காலிகமாகத் தள்ளி வைத்திருக்கிறது கூகுள். உலகளவில் பல்வேறு மொழிகளிலும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஜெமினி ஏஐயானது அனைத்து மொழிகளும் சிறப்பான பயன்பாட்டையே கொண்டிருக்க வேண்டும் என சுந்தர் பிச்சை வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. சாட்ஜிபிடியைப் போல பார்டு ஏஐயும் எழுத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. எனவே, ஜிபிடி-4ஐ போல ஜெமினி ஏஐயை, எழுத்து மற்றும் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறது கூகுள். ஜனவரி 2024ல் இந்த ஜெமினி ஏஐயின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.
ஜெமினி ஏஐ vs ஜிபிடி-4:
ஓபன்ஏஐ-யின் ஜிபிடி-4ஐ விட சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் நோக்கத்துடனேயே ஜெமினி ஏஐயை உருவாக்கியிருக்கிறது கூகுள். நாம் வழங்கும் கட்டளை மற்றும் புகைப்படங்களைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்ப புகைப்படங்கள் மற்றும் எழுத்து வடிவிலேயே பதில்களை வழங்கும் திறனைக் கொண்டிருக்கிறது ஜெமினி ஏஐ. ஆனால், எழுத்து மற்றும் புகைப்படம் மட்டுமல்லாது பிற வகையான உள்ளடக்கங்களையும் உருவாக்கும் வகையிலேயே ஜெமினி ஏஐ மாடலை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். உதாரணத்திற்கு ஒரு வலைத்தளத்தைக் கூட கட்டளைகளைக் கொண்டே ஜெமினி ஏஐயின் உதவியுடன் நம்மால் உருவாக்க முடியுமாம். ஆனால், பார்டைப் போல ஜெமினி ஏஐ வசதியை தங்களுடைய பிற சேவைகளில் கூகுள் பயன்படுத்துமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.