இன்று ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ
இந்தியாவின் முதல் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டமாக செயல்படுத்தப்படவிருக்கும் ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டமான 'TV-D1' திட்டத்தை இன்னும் சில மணி நேரங்களில் செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ. ஒரேயொரு நிலை கொண்ட லிக்விட் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் பயன்படுத்தவிருக்கும் முக்கியமான அம்சமான க்ரூ மாடியூஸ் சிஸ்டத்தை (Crew Module System) சோதனை செய்யவிருக்கிறது இஸ்ரோ. பூமியின் குறைந்த உயர சுற்று வட்டப்பாதை விண்வெளித் திட்டங்கள் இந்த க்ரூ மாடியூல் சிஸ்டத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. பூமியிலிருந்து விண்ணில் ஏவப்படுவது முதல், பூமிக்கு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவது வரை அனைத்தும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது.
க்ரூ மாடியூஸ் சிஸ்டம் என்றால் என்ன?
விண்வெளியில் விண்வெளி வீரர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு ஏதுவான சூழலை அளிப்பதே இந்த க்ரூ மாடியூல் சிஸ்டத்தின் முக்கியமான பணி. விண்ணில் ஏவப்படும் போதும், பூமியில் தரையிறங்கும் போதும் வளிமண்டலத்தின் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலான கட்டமைப்போடு, நெருப்பாலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் இந்த க்ரூ மாடியூல் வடிவமைக்கப்பட்டிருக்கும். முக்கியமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி வரும் போது விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான பல்வேறு அம்சங்களை இந்த க்ரூ மாடியூல் கொண்டிருக்கும். இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், ககன்யான் திட்டம் தொடர்பான அடுத்தடுத்த சோதனை ஓட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.
TV-D1 திட்டத்தின் நோக்கம் என்ன?
சோதனை வாகனத்தை (ராக்கெட்) இயக்குவது, அதன் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது மற்றும் க்ரூ மாடியூல் சிஸ்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது ஆகியவையே இந்த TV-D1 சோதனை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ராக்கெட்டில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டாலோ அல்லது வேறு பிரச்சினைகள் காரணமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டாலோ அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தையும் நாளை செயல்படுத்தி சோதனை செய்யவிருக்கிறது இஸ்ரோ. பூமிக்கும் திரும்பும் அல்லது ராக்கெட்டிலிருந்து வெளியேரும் விண்வெளி வீரர்கள் க்ரூ மாடியூலுடன் வங்கக் கடலிலேயே வீழும் வண்ணம் ககன்யான் திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் வீழும் மாடியூலை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர கடற்படைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நாளையே சோதனை முயற்சியில் இந்திய கடற்படையும் பங்குபெறவிருக்கிறது.
எப்போது ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்?
இன்றைய சோதனை வெற்றிகரமாக நிறைவடைவதைத் தொடர்ந்து, இதே போன்ற பல்வேறு சோதனைகளை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. சோதனை ஓட்டங்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு ஆகியவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டு 2025ம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் LVM3 ராக்கெட் மூலம், இந்திய விண்வெளி வீரர்கள் 400 கிமீ உயர சுற்று வட்டப்பாதைக்கு கூட்டிச் சென்று மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு திரும்புவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம், உலகளவில் விண்வெளி துறையில் அடுத்த படியை இந்தியா எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரலையில் காண்பது எப்படி?
முக்கியமான விண்வெளித் திட்டங்களின் செயல்பாடுகளின் போது அவற்றை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நேரலை செய்வது வழக்கம். நாளைய TV-D1 சோதனை ஓட்டத்தையும், தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தின் மூலம் நேரலை செய்யவிருக்கிறது இஸ்ரோ. இது தவிர டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும் இந்த சோதனை ஓட்டம் நேரலை செய்யப்படவிருக்கிறது. இன்று காலை 8 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கவிருக்கும் நிலையில், 7.30 மணிக்கு அனைத்து தளங்களிலும் அதன் நேரலை தொடங்கும் என தங்களுடைய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருக்கிறது இஸ்ரோ.