
விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சி வெற்றி பெறுமா? மாதவன் நாயர் கூறுவது இதுதான்
செய்தி முன்னோட்டம்
சந்திரயான் 3இன் இரண்டாம் கட்டம் நெருங்கி வரும் நிலையில், சந்திரனின் மேற்பரப்பில் கடும் குளிரையும் மீறி, கணினி மீண்டும் செயல்படும் சாத்தியம் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளன.
இது கிட்டத்தட்ட ஃப்ரீசரில் இருந்து எதையாவது எடுத்து அதைப் பயன்படுத்த முயற்சிப்பது போன்றது. வெப்பநிலை -150 டிகிரி செல்சியஸைத் தாண்டியிருக்கும்" என்று கூறினார்.
மேலும், "அந்த வெப்பநிலையில் பேட்டரிகள், எலக்ட்ரானிக்ஸ் போன்றவை எவ்வாறு செயல்படும் என்பதை உறுதிப்படுத்த போதுமான சோதனைகளை செய்திருந்தாலும், நிலவில் அது நடக்கும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.
madhavan nair concers about vikram functionality
சூரிய கதிர்களை பயன்படுத்தி விக்ரமை மீண்டும் தட்டி எழுப்ப தயாராகும் இந்தியா
இதற்கிடையே, நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் பணியை முடித்த பிறகு, ஸ்லீப் மோடுக்கு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை, சூரியக் கதிர்களை பயன்படுத்தி மீண்டும் எழுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது.
மாதவன் நாயர், "சூரிய வெப்பம் கருவிகளை சூடாக்கும் மற்றும் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும். இது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், கணினி மீண்டும் செயல்படுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
வெற்றிகரமான மறுசெயல்பாடு சந்திர மேற்பரப்பில் இருந்து முக்கியமான தரவுகளை சேகரிக்க இந்தியாவுக்கு உதவும்," என்று கூறினார்.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி தபன் மிஸ்ராவும், கடுமையான குளிரில் லேண்டர் மற்றும் ரோவர் எதிர்கொள்ளும் பெரும் சவால்கள் குறித்த கவலைகளை வெளிப்படுத்தியதோடு, இது மீண்டும் வேலை செய்தால், உண்மையில் ஒரு அதிசயமாக இருக்கும் என்றார்.