LOADING...
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பா? வாட்ஸ்அப்பில் வேகமாக பரவும் மெசேஜ்; நம்பி லிங்கை க்ளிக் பண்ணா ஆபத்து
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் என பரவும் வாட்ஸ்அப் லிங்க்

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பா? வாட்ஸ்அப்பில் வேகமாக பரவும் மெசேஜ்; நம்பி லிங்கை க்ளிக் பண்ணா ஆபத்து

எழுதியவர் Sekar Chinnappan
Jun 15, 2026
05:39 pm

செய்தி முன்னோட்டம்

சமீபகாலமாக வாட்ஸ்அப் செயலியில் "தேசிய மாணவர் லேப்டாப் திட்டம் 2026" (National Student Laptop Scheme 2026) என்ற பெயரில் ஒரு மெசேஜ் வைரலாக பரவி வருகிறது. லேப்டாப் வாங்க வசதியில்லாத அனைத்து மாணவர்களுக்கும் அரசு இலவசமாக லேப்டாப் வழங்குகிறது என்றும், அதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கிவிட்டது என்றும் அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது முற்றிலும் போலியானது என்றும், மாணவர்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருட நடக்கும் ஆன்லைன் மோசடி என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்த உண்மை நிலவரத்தை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

முக்கிய சிறப்பம்சங்கள்

வைரலாக பரவும் செய்தியில் உள்ளவை

வாட்ஸ்அப்பில் உலா வரும் அந்த மெசேஜில், "2026-ஆம் ஆண்டில் மட்டும் 9,60,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கற்றலை மேம்படுத்த இலவச லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் லேப்டாப்களைப் பெறத் தொடங்கிவிட்டனர். நீங்களும் உடனே பதிவு செய்ய கீழே உள்ள லிங்கைக் க்ளிக் செய்யவும்" என்று ஆசை வார்த்தைகள் கூறப்பட்டிருக்கும். "இலவச லேப்டாப் திட்டம்" என்று வாட்ஸ்அப்பில் பரவும் இந்த செய்தி முற்றிலும் போலியானது என மத்திய அரசின் PIB Fact Check தெளிவுபடுத்தியுள்ளது. இந்த மெசேஜில் உள்ள லிங்கைக் க்ளிக் செய்தால் மொபைலில் உள்ள வங்கி விபரங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் திருடப்படலாம். அரசுத் திட்டங்கள் எதையும் வாட்ஸ்அப் லிங்குகளை நம்பாமல், எப்போதும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே சரிபார்க்க வேண்டும்.

மோசடி

இந்த மோசடி எப்படி வேலை செய்கிறது?

அந்த மெசேஜின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைக் க்ளிக் செய்த உடனே, அது உங்களை ஒரு போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கே உங்கள் பெயர், மொபைல் எண், முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை உள்ளிடுமாறு கேட்கும். நீங்கள் விபரங்களைக் கொடுத்ததும், "இந்த செய்தியை மேலும் 10 வாட்ஸ்அப் குரூப்களுக்குப் பகிர்ந்தால் மட்டுமே லேப்டாப் கிடைக்கும்" என்று புதிய நிபந்தனை விதிக்கும். இதன் மூலம் அந்த போலி லிங்க் சங்கிலித் தொடர் போல எல்லாரையும் சென்றடைகிறது.

Advertisement

ஆபத்து

பேராபத்து என்ன?

தரவு திருட்டு: நீங்கள் கொடுக்கும் விபரங்களை வைத்து உங்கள் பெயரிலேயே போலி சிம்கார்டுகள் வாங்கவோ அல்லது சைபர் குற்றங்கள் செய்யவோ வாய்ப்புள்ளது. வங்கி கணக்கு காலி: சில நேரங்களில் டெலிவரி கட்டணம் அல்லது ஜிஎஸ்டி என்ற பெயரில் ₹200 அல்லது ₹500 கட்டச் சொல்வார்கள். நீங்கள் கார்டு விபரங்களை உள்ளிட்டதும், உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணத்தையும் திருடிவிடுவார்கள்.

Advertisement

தற்காப்பு

தற்காத்துக்கொள்வது எப்படி?

மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB Fact Check) இத்தகைய எந்த ஒரு திட்டத்தையும் அரசு அறிவிக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனவே, வாட்ஸ்அப்பில் உங்களுக்கு நெருக்கமானவர்களே அனுப்பினாலும், இத்தகைய இலவச அறிவிப்பு லிங்குகளை எக்காரணம் கொண்டும் க்ளிக் செய்யாதீர்கள். எதையும் அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்களுக்கு (gov.in) சென்று மட்டுமே சரிபார்க்க வேண்டும்.

Advertisement