LOADING...
அண்டார்டிகாவின் முதல் டைனோசர் எலும்பு கண்டெடுப்பு! 40 ஆண்டுகளாகப் பெட்டியில் கிடந்த அரிய புதைபடிவம்
அண்டார்டிகாவின் முதல் டைனோசர் எலும்பு கண்டெடுப்பு

அண்டார்டிகாவின் முதல் டைனோசர் எலும்பு கண்டெடுப்பு! 40 ஆண்டுகளாகப் பெட்டியில் கிடந்த அரிய புதைபடிவம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2026
05:39 pm

செய்தி முன்னோட்டம்

அண்டார்டிகா கண்டத்தில் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் அரிய எலும்பு புதைபடிவம் ஒன்று, கடந்த 40 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ஒரு மேஜைப் பெட்டிக்குள் தூங்கி வழிந்த சுவாரசியமான உண்மை தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 1985 ஆம் ஆண்டு அண்டார்டிகா பயணத்தின் போது கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்பு, என்னவென்று தெரியாததால் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிறுவனத்தின் புவியியல் சேகரிப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இதனை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இது உலகின் மிகப்பெரிய டைனோசர் இனமான டைட்டனோசர் வகையின் வால் எலும்பு என்பதை உறுதி செய்துள்ளனர்.

40 ஆண்டுகாலம் ஏன்?

40 ஆண்டுக்கால மறதிக்குக் கிடைத்த அறிவியல் விளக்கம்

இந்த அரிய புதைபடிவத்தை பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிறுவனத்தின் மேலாளர் டாக்டர் மார்க் எவன்ஸ் தற்செயலாகப் பெட்டிகளை ஆய்வு செய்தபோது கண்டுபிடித்தார். கடந்த 1985 டிசம்பர் 9 ஆம் தேதி புவியியலாளர் மைக் தாம்சன் என்பவரால் ஜேம்ஸ் ராஸ் தீவிலிருந்து இந்த 10 செமீ அகலமுள்ள எலும்பு சேகரிக்கப்பட்டு, அவரது கள நோட்டுப்புத்தகத்தில் 'பெரிய ஊர்வனவற்றின் முதுகெலும்பு' என்று குறிக்கப்பட்டிருந்தது. அப்போது இது கடல் வாழ் உயிரினத்தின் எலும்பாக இருக்கலாம் என்று தவறாகக் கருதப்பட்ட நிலையில், தற்பொழுது இது நிலத்தில் வாழ்ந்த டைனோசரின் எலும்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தனித்துவம்

டைட்டனோசர் டைனோசரின் தனித்துவமான வடிவ அமைப்பு

லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பேராசிரியர் பால் பாரெட் இந்த எலும்பின் வடிவத்தை விரிவாக ஆய்வு செய்து, இது டைட்டனோசர் வகைதான் என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த டைனோசர்களின் முதுகெலும்புகள் ஒன்றுடன் ஒன்று பந்து-கிண்ண மூட்டு (Ball-and-socket joints) அமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் தனித்துவமான பண்பைக் கொண்டவை ஆகும். பொதுவாக டைட்டனோசர்கள் நான்கு கால்களுடன், மிக நீண்ட கழுத்து மற்றும் வால்களைக் கொண்ட பிரம்மாண்ட தாவர உண்ணிகள் ஆகும். உலகிலேயே மிகப் பெரிய டைட்டனோசர்கள் 115 அடி நீளமும் 60 டன் எடையும் கொண்டவையாக வாழ்ந்துள்ளன.

Advertisement

அண்டார்டிகா

82 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய அண்டார்டிகாவின் வரலாறு

தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள இந்த வால் எலும்பின் அளவை வைத்துப் பார்க்கும் போது, இந்த அண்டார்டிகா டைனோசர் சுமார் 23 அடி (7 மீட்டர்) நீளம் கொண்ட ஒரு சிறிய அல்லது இளம் வயது டைனோசராக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சுமார் 82 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கிரெட்டேசியஸ் காலத்தில் (Late Cretaceous Period) இந்த டைனோசர் வாழ்ந்துள்ளது. தற்பொழுது மனிதர்கள் வாழவே தகுதியற்ற பனிப்பிரதேசமாக இருக்கும் அண்டார்டிகா, அக்காலத்தில் அடர்ந்த பசுமையான காடுகளுடனும், பல்வேறு விலங்கினங்கள் வாழ்வதற்கேற்ற சிறந்த சூழலுடனும் திகழ்ந்துள்ளது என்பதற்கு இந்த புதைபடிவம் மிக முக்கிய சான்றாகும்.

Advertisement